பட்ஜெட் விலையில் மேக்புக் மடிக்கணினியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சாதனம் வரும் மார்ச் 4-ம் தேதி சர்வதேச சந்தையில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஸ்டீவ் ஜாப்ஸ், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் (1976) ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினர். முதலில் கம்யூட்டரை வடிவமைத்தார்கள். படிப்படியாக ஆப்பிள் நிறுவனம் பல்வேறு டிஜிட்டல் டிவைஸ்களை அறிமுகம் செய்தது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பை என இரண்டு ஆப்பிள் ஸ்டோர்கள் இயக்கத்தில் உள்ளன. சென்னை உட்பட சில நகரங்களில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் இன்னும் பிற சாதனங்களுக்கு தனி டிமாண்ட் உள்ளது. தனித்துவமான பயனர் அனுபவம், பாதுகாப்பு உள்ளிட்டவை இதற்கு அடிப்படை காரணங்கள். அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடத்திலும் ஆப்பிள் சாதனங்களுக்கு மவுசு இருக்கிறது. அதுவே சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் நிலைநிற்க காரணம்.
உலக மொபைல் போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், லேப்டாப் சந்தையிலும் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் வகையில் மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது.
இந்நிலையில், வரும் மார்ச் மாதம் மலிவு விலையில் மேக்புக் லேப்டாப் சாதனம் அறிமுகமாக உள்ளதாக தகவல்.
இந்த மலிவு விலை மேக்புக் லேப்டாப், இதுவரை ஆப்பிள் வெளியிட்ட மேக்புக்கில் மிகவும் விலை குறைந்தது என டெக் வல்லுநர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதில் ஏ18 புரோ சிப்செட், 12.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளதாக தகவல். மேலும், நீலம், மஞ்சள் மற்றும் பிங்க் நிறத்தில் இது வெளியாக உள்ளது. அமெரிக்க சந்தையில் இதன் விலை 500 டாலர்கள். இந்தியாவில் அதன் மதிப்பு ரூ.46,000 ஆக உள்ளது.
மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ள இந்த அறிமுக விழாவில் ஐபோன் 17e ஸ்மார்ட்போன், மேம்படுத்தப்பட்ட மேக்புக் புரோ, புதிய ஐபாட் ஏர் மற்றும் ஐபாட் (12-வது ஜெனரேஷன்) சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்.