தொழில்நுட்பம்

கலாமுக்கு பெருமகிழ்ச்சி தந்த கண்டுபிடிப்பு!

ஜூலை 27 - அப்துல் கலாம் நினைவு நாள்

ப்ரதிமா

இந்தியாவின் ‘ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படும் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏவூர்தியான எஸ்.எல்.வி-IIIன் திட்ட இயக்குநராகச் செயல்பட்டார்.

அந்த ஏவூர்தி மூலம் ரோஹிணி செயற்கைக்கோள் 1980 ஜூலையில் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. இதன் மூலம் விண்வெளி ஆய்வில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஏவூர்தித் திட்டங்களில் குறிப்பாக பி.எஸ்.எல்.வி தொழில்நுட்ப மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகித்தார் அப்துல் கலாம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் இணைந்து, ஒருங்கிணைந்த நவீன ஏவுகணை தயாரிப்புத் திட்டத் துக்குப் பொறுப்பேற்றார்.

பல்வேறு அறிவியல் நிறுவனங்களின் கூட்டுழைப்போடு அக்னி, பிரித்வி ஏவுகணைத் திட்டங்களை அப்துல் கலாம் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.

1992 முதல் 1999 வரை பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் செயலராகவும் பொறுப்பு வகித்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் அணு ஆற்றல் துறையோடு இணைந்து பொக்ரான் II அணுகுண்டுப் பரிசோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி அணு ஆயுதத் தயாரிப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இடம்பெற வைத்தார்.

இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டோ, பிற குறைபாடுகளாலோ நடக்க முடியாமல் போன குழந்தைகள் நான்கு கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைச் சுமந்துகொண்டு நடப்பதைப் பார்த்த அப்துல் கலாம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய முடிவெடுத்தார்.

ஏவூர்திகளில் அதிக வெப்பத்தைத் தாங்கும் வகையில் பயன்படுத்தப்படும் கூட்டு உலோகப் பொருளைப் பயன்படுத்தி 400 கிராம் எடையுள்ள செயற்கைக் கால்களைத் தன் குழுவினர் உதவியோடு வடிவமைத்தார்.

முதல் உள்நாட்டு ஏவூர்தித் தயாரிப்பைவிட, பொக்ரான் அணுகுண்டுப் பரிசோதனையைவிட, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிய இந்தக் கண்டுபிடிப்பு தனக்குப் பெருமகிழ்ச்சி அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT