அரூர்: அரூர் பகுதியில் இருந்து தாட்கோ மூலம் வழங்கப்படும் பயிற்சிக்காக தருமபுரிக்கு சென்று வர சிரமமாக உள்ள நிலையில், அரூரிலேயே தாட்கோ தொழிற்பயிற்சி மையம் அமைத்திட வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ நிறுவனம்) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் கணினிப் பயிற்சிகள், வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள், போட்டித் தேர்வு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப் படையிலான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள், பெண்கள் பல்வேறு தொழில் பயிற்சிகளை கற்றறிந்து பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அரூர், கடத்தூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 ஒன்றியங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிக அளவிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மலைவாழ் மக்கள் வசித்து வரும் நிலையில் இவர்கள் தாட்கோ மூலம் பல்வேறு பயிற்சிகளை பெற தருமபுரிக்கு செல்லும் நிலை உள்ளது. பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்க 70 முதல் 100 கிலோ மீட்டர் வரை தினசரி சென்று திரும்பும் நிலை உள்ளது.
இதனை தவிர்க்க தாட்கோ மூலமாக தொழில் பயிற்சிகளை அரூரை மையமாகக் கொண்டு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் கோட்டப்பட்டி, சிட்லிங், சித்தேரி, கலசப்பாடி, வேலனூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளை சேர்ந்தவர்கள் தொழிற்பயிற்சி கற்க வசதியாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பழங்குடியினத் தைச் சேர்ந்த கோட்டப்பட்டி தமயந்தி, சித்தேரி சுரேஷ் உள்ளிட்ட இளைஞர்கள் கூறியதாவது: அரூர் மற்றும் பாப்பிரெட்டிப் பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக அளவில் படித்த, வேலைவாய்ப்பற்ற, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள், இளம்பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு சார்பில் வழங்கப்படும் பல்வேறு தொழில் பயிற்சி பெற தருமபுரிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பெரும்பாலானோர் ஆர்வம் இருந்தும், தொலைவு காரண மாக தவிர்த்து வருகின்றனர்.
இதனை போக்கிடும் வகையில் அரூர் நகரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு அலுவலகம் காலியாக உள்ள நிலையில், அவற்றில் ஏதேனும் ஒரு கட்டிடத்தில் தொழிற்பயிற்சி வழங்கிட தாட்கோ நிறுவனம் முன் வர வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளனர்.