ஒடிசா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: 100+ கிராமங்கள் பாதிப்பு

ஜார்க்கண்ட் கனமழை தாக்கம்
ஒடிசா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: 100+ கிராமங்கள் பாதிப்பு
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசாவின் சுபர்ணரேகா உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட்டின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள கலுடிஹ் தடுப்பணையின் 13 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், சுபர்ணரேகா நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து செல்கிறது. ராஜ்காட் பகுதியில் நிதியின் நீர்மட்டம் 11.54 மீட்டரை எட்டியது. இங்கு அபாய அளவு 10.36 மீட்டராகும்.

இந்த ஆண்டில், சுபர்ணரேகா நதியில் மூன்றாவது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பாலசோர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியாபால், ஜலேஸ்வர், போகிராய் ஆகிய வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

புதாபலாங்கா மற்றும் பிராமணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மயூர்பஞ்ச் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களில் உள்ள 146 கிராமங்களும், பாரிபாரா நகரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாலசோர் மாவட்டத்தின் ரெமுனா மற்றும் சதார் வட்டாரங்களில் சில பகுதிகளை நேற்று (செவ்வாய்கிழமை) மூழ்கடித்த புதாபலங்கா நிதியில் தற்போது வெள்ள நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 5,000 பேரில் பலர் இன்று காலை தங்கள் கிராமங்களுக்குத் திரும்பத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், பிராமணி நிதியின் நீர்மட்டத்தில் மாற்றம் இல்லாததால் ஜாஜ்பூர் மாவட்டத்தில் நிலைமை மோசமாகவே உள்ளது. இந்த மாவட்டத்தில் 62 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக இங்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தின் தசரத்பூர், பாரி, பிஞ்சார்பூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பத்ராக் மாவட்டத்தில் பைதரணி ஆறு 18.20 மீட்டர் உயரத்தில் பாய்ந்து வருகிறது. இது அபாய அளவான 18.33 மீட்டருக்கு சற்றே குறைவாக உள்ளது. பத்ராக் மாவட்டத்தின் தம்நகர், சந்த்பாலி, திஹிடி ஆகிய வட்டாரங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஒடிசாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் டைரிங் பகுதியில் காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக 42.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஒடிசா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: 100+ கிராமங்கள் பாதிப்பு
கோயில்களில் செல்போன்களை பாதுகாக்க கட்டணம் வசூலிப்பதா? - இந்து முன்னணி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in