சென்னை: சென்னையைச் சேர்ந்த 16 வயதான நிஷா சசிகுமார், ‘எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்பெண்’ என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதுகுறித்து, நிஷா சசிகுமார் மற்றும் தந்தை சசிகுமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நானும் என் மகள் நிஷாவும் இணைந்து உலகத்தில் உள்ள 7 கண்டங்களிலும் உள்ள 7 உயர்ந்த சிகரங்களை அடைய வேண்டும் என்ற நோக்கோடு பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
மே 25-ம் தேதி உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டை அடைந்து இளம்வயதில் நிஷா சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது பெண், 187 நாட்களில் சிகரத்தை அடைந்த நிலையில் 16 வயதுடைய நிஷா, 80 நாட்களில் இந்த சாதனையை செய்ததோடு, இந்தியாவின் முதல் நபர் என்ற கூடுதல் சிறப்பையும் பெற்றுள்ளார்.
இந்த சாதனை மூலமாக, நாடுமுழுவதும் உள்ள பெண் குழந்தைகள் தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் உருவாக வேண்டும். இதுவரை ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கிளிமாஞ்சாரோ, ரஷ்யாவின் எல்புரூஸ், ஆஸ்திரேலியவின் கோசியாஸ், இந்தோனேஷியாவின்காஸ்டன் பிரமிட், அர்ஜென்டினாவின் அகன்காங்கோ சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளோம்.
அடுத்து வட அமெரிக்கா அலாஸ்காவில் உள்ள டெனாலி மலையில் ஏற உள்ளோம். இதுவரை ஏறிய மலைகளிலேயே அந்த மலை மிகவும் கடினமாக இருக்கும். அதற்கான பயிற்சியும் மேற்கொண்டு இருக்கிறோம்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது மிகவும் சவாலாக இருக்கும் என்பதால் கடந்த ஒரு வருடமாக பெங்களூரு, மைசூருவில் உள்ள மலைகளில் ஏறி பயிற்சி மேற்கொண்டோம். படிப்பையும் விட்டுவிடக் கூடாது என்பதால் வாரத்தில் 5 நாட்கள் பள்ளியிலும் வார இறுதி நாட்களில் பயிற்சிக்காக வெளி மாநிலங்களிலும் சென்று பயிற்சி மேற்கொண்டோம்.
எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட மலைகளில் ஏறியது தொடர்பாக தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். தமிழக அரசு சார்பில் எங்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இளம் வயதில் 7 கண்டங்களிலும் உள்ள மலை உச்சிகளில் ஏறி சாதனை படைக்கவேண்டும் என்ற பயணத்தை நவம்பர் மாதத்தில் முடிக்க இருக்கிறோம். இதன்மூலம் உலகில் மிக இளம் வயதில் அனைத்து சிகரங்களையும் கடந்த இளம் பெண் என்ற சாதனையை படைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.