ராமதாஸ் | கோப்புப்படம் 
தமிழகம்

“கீழே விழுவது நீயாகத்தான் இருப்பாய்...” - அன்புமணி மீது ராமதாஸ் ஆவேசம்

செய்திப்பிரிவு

கடலூர்: “நான் வியர்வை சிந்தி வளர்த்த ஆலமரம் தான் பாமக. மரத்தின் மேல் கிளையில் உட்கார்ந்து கொண்டு, நீ அடிக்கிளையை வெட்டுகிறாய். கீழே விழுவது நீயாகத்தான் இருப்பாய்” என்று அன்புமணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாகப் பேசினார்.

பாமக-​வின் தலை​வ​ராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்​புமணி​தான் தொடர்​வார் என்று அறி​விப்பு வெளி​யிட்ட தேர்​தல் ஆணை​யம், கட்​சி​யின் நிறு​வனர் ராம​தாஸ் அளித்த மனுவை நிராகரித்து உத்​தர​விட்​டுள்​ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது: “‘எனக்கு ஒரு மகன் பிறப்பான்... என்னைப் போல் இருப்பான்’ என்று எண்ணினேன். ஆனால், எனக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் என்னிடம் இருந்து என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை. நான் சிந்திய வியர்வை எல்லாவற்றையும் பறித்து விட்டான்.

இருந்தாலும் என்னிடமிருந்து என் உரிமையை மட்டும் பறிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் சென்றாலும் என் உரிமையை பறிக்க முடியாது. சூழ்ச்சியால், தன்னைத் தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். எந்த நீதிமன்றத்துக்குச் சென்றாலும் ராமதாஸை வீழ்த்த முடியாது. டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.

46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிராமங்கள்... என் மக்களிடம் சென்று நான் வளர்த்த கட்சியை முழுவதும் அபகரிக்க முயற்சிக்கிறாய்! அதனால் தான் இந்தக் கட்சியின் தலைவராக ஆகியிருக்கிறேன்; எனக்கு உதவியாக செயல் தலைவராக எனது மகள் ஸ்ரீ காந்திமதியை நியமித்துள்ளேன்.

கடந்த 28.05.2022 அன்று திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உன்னுடைய பதவிக்காலம் முடிந்து விட்டது. ‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். பணத்தால் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கியிருக்கிறாய்! என்னுடன் இருந்தவர்களையும் விலைக்கு வாங்கி விட்டாய்! இருந்தாலும் ஜெயிக்கப் போவது இந்த ராமதாஸ்தான்.

என்ன தான் பணம் இருந்தாலும், உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. தனியாகவே நின்று 4 எம்எல்ஏக்களை பெற்ற கட்சி இது. தற்போது கூட்டணி வைத்து 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதற்கு அன்புமணியின் தலையீடுதான் காரணம். நான் மக்களிடம் சென்று ஓட்டு கேட்டபோது, ‘ஓட்டு ஒன்று போடுங்க; கட்சியின் வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் நோட்டு ஒன்று கொடுங்க’ என்று கேட்டு வளர்த்த கட்சி இது. என்னுடைய உரிமையையும் உழைப்பையும் யாராலும் திருட முடியாது.

இது போன்று தானாக விரும்பி வரும் ஒரு கூட்டத்தை உன்னால் கூட்ட முடியுமா? ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.25 லட்சத்தை முன்கூட்டியே கொடுத்துதான் உன்னால் கூட்டத்தை கூட்ட முடிகிறது. ‘இன்று மழை, புயல், சூறாவளி’ என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தாண்டி இங்கு கூடியிருக்கிறார்கள். ‘ஐயா தான் எங்களுக்கு எல்லாம்!’ என்று இவர்கள் நினைத்து விட்டார்கள்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்; இந்த வழக்கு வருகிற திங்கள்கிழமை விசாரணைக்கு வரும். உண்மை தான் ஜெயிக்கும். என்னை, உன்னால் வெல்ல முடியாது. நான் செய்த பெரிய தவறு என்னவென்றால் உன்னை படிக்க வைத்து டாக்டர், மத்திய மந்திரி, கட்சியின் தலைவராக நியமித்ததுதான்.

நான் மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வந்து நலம் விசாரித்தனர். நீ மட்டும், கீழே உள்ள மருத்துவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டாய்! தமிழக மக்களையும், வன்னிய மக்களையும் ஏமாற்ற முடியாது. நீதி, நியாயம் வெற்றி பெறும். என் பக்கம் நியாயம் உள்ளது; மக்கள் என்னுடன் உள்ளனர். சினிமா பாணியில் சொல்லப் போனால். உன் பாட்சா என்னிடம் பலிக்காது.

கட்சி நிர்வாகிகளை வைத்து கிரேன் மூலம் மாலை போட சொல்வது உன்னுடைய பழக்கம். மாறாக, நல்ல புத்தகத்தை பரிசாக தாருங்கள் என்று கேட்பது என் வழக்கம். மக்கள் என் பக்கம். நான் வியர்வை சிந்தி வளர்த்த ஆலமரம் தான் இந்தக் கட்சி. மரத்தின் மேல் கிளையில் உட்கார்ந்து கொண்டு, நீ அடிக்கிளையை வெட்டுகிறாய்! கீழே விழுவது நீயாகத்தான் இருப்பாய்! நீ வெட்டினாலும் ஆலமரத்தின் கீழ் உள்ள ஆயிரக்கணக்கான விழுதுகள் தாங்கி நிற்கும்.

நான் வயிறு எரிந்து சொல்கிறேன்; உன் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல்தான், பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் வளர்ச்சி அடையப் போகிறது. 2026-ம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஏராளமான சட்டப்பேரவை உறுப்பினர்களை உருவாக்கி, அவர்களில் சிலரை அமைச்சராக உருவாக்குவேன். இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்” என்று ராமதாஸ் பேசினார்.

SCROLL FOR NEXT