தமிழகம்

புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவுக்கு மீண்டும் ஓர் அக்னி பரீட்சை!

சு.திருநாவுக்கரசர், எஸ்.ரகுபதி வரிசையில் சி.விஜயபாஸ்கர்!

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அரசியல் வரலாற்றில் கட்சி மாறுதல்களும், புதிய அரசியல் நகர்வுகளும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றன.

அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் சு.திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்று, இளம் வயதிலேயே சட்டப்பேரவை துணைத் தலைவராகவும், பிறகு அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாட்டால் கட்சியை விட்டு விலகி, புதிய கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் பாஜக-வில் இணைந்து மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் மாநிலத் தலைவராகவும் எம்.பி.யாகவும் செயல்பட்டார்.

இதேபோல, திருமயம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்று அமைச்சராகப் பணியாற்றியவர் எஸ்.ரகுபதி. இவர், ஜெயலலிதா மீது கொண்ட பற்றின் காரணமாக தனது கல்லூரிக்கு ஜெ.ஜெ எனவும் பெயர் வைத்தார். அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தவர், பின்னாளில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் இணைந்தார். மத்திய மற்றும் மாநில அமைச்சராகவும் இருந்தார். தற்போது, எம்எல்ஏவாக உள்ளார்.

இத்தகைய முன்னோடிகளின் வரிசையில், புதுக்கோட்டையில் ஒரு முறையும், விராலிமலையில் 4 முறையும் என போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, அதிமுகவின் செல்வாக்குமிக்க முகமாகத் திகழ்ந்தவர் சி.விஜயபாஸ்கர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்றாலும், அதிமுக தோல்வியடைந்ததால், பொதுச் செயலாளர் பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.

இதன் காரணமாக, அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேற்று தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

அவரது இந்த அரசியல் நிலைப்பாடு, புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

‘‘மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக விளங்கியவர் சி.விஜபாஸ்கர். அவர், திடீரென விலகி இருப்பதால் அந்த இடத்தை யாராலும் அவ்வளவு எளிதாக நிரப்பி விட முடியாது.

மேலும், மாவட்டம் முழுவதிலும் இருந்து அவருக்கு நெருக்கமானவர்கள் அதிமுகவில் இருந்து விலகியதால் கட்சியை நிர்வகிப்பது கடினம். இதனால், கட்சியில் பெரிய பின்னடைவு ஏற்படும்’’ என விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், ‘‘கடந்த காலங்களில் திருநாவுக்கரசர், ரகுபதி போன்ற ஜாம்பவான்கள் விலகிய பிறகும் புதுக்கோட்டையில் அதிமுக மீண்டு வந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, 2011 தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது (அதில் விஜயபாஸ்கரும் ஒருவர்). அந்த வரிசையில் இப்போது விஜயபாஸ்கர் கட்சியை விட்டு சென்றுள்ளார்.

இவர் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்த பிறகு தான் மாவட்டத்தில் அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டு, கடந்த தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இவர் மட்டுமே வென்றார்.

மேலும், விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தாலும், மாவட்டம் முழுவதும் உள்ள தொண்டர்கள் அவருடன் செல்லவில்லை. விராலிமலை தொகுதியைச் சேர்ந்த ஒருதரப்பினர் மட்டும் தவெக-வுக்குச் சென்றுள்ளதால் கட்சிக்கு பெரிய பாதிப்பு இருக்காது’’ என அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரத்தின் மையமாக விளங்கிய தலைவர்கள் தடம் மாறுவது புதுக்கோட்டைக்கு புதிதல்ல. முன்னோடிகளின் அரசியல் பாதையைப் போலவே தற்போதைய சூழலில் சி.விஜயபாஸ்கரின் தவெக நோக்கிய நகர்வும் அமைந்துள்ளது.

இந்த அதிரடி மாற்றம் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவைப் பலவீனப்படுத்துமா அல்லது புதிய தலைமை உருவாக வழிவகுக்குமா என்பதையும், மாற்றுக்கட்சிகளில் திருநாவுக்கரசர், ரகுபதிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் விஜயபாஸ்கருக்கு தவெகவில் கிடைக்குமா என்பதையும் வரும் தேர்தல் களமே தீர்மானிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

SCROLL FOR NEXT