திருவள்ளூர்: 2047-ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் முதல் நாடாக இந்தியா மாறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 61,000 மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற பிரதான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பணியாளர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் குரூப் மையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு 328 உள்துறை, பாதுகாப்புத் துறை, பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: 2047-ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்கு, தற்போது பணிஆணை பெற்றுள்ள அரசு பணியாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 2010ம் ஆண்டுக்கு முன்பு பொருளாதார வளர்ச்சியின் எந்த இடத்தில் உள்ளோம் என்பதை தேடிக் கொண்டிருந்தோம். ஆனால் 2011-க்கு பிறகு வளர்ச்சியின் மூலம் தற்போது நான்காவது இடத்தை பெற்றுள்ளோம்.
2047-ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் முதல் நாடாக இந்தியா மாறும். தற்போது நாம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் எல்லை தாண்டாமலே நாம் வெற்றி அடைந்துள்ளோம். அதன் மூலம் இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. 2037-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நம் நாட்டில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.