சென்னை: நூலக புத்தகங்கள் கொள்முதல் பட்டியல், வெளிப்படையற்ற கணக்குகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியது: பேராசிரியரான எழுத்தாளர் பெருமாள் முருகனும், அவரது மனைவியும் காலச்சுவடு நிறுவனத்தில் முதலீட்டாளர்கள். தனியார் பதிப்பகத்தில் முதலீடு செய்தவர், அரசு புத்தக தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருக்கலாமா. அப்படி அவர் இடம்பெற்றிருந்தால், அவர் மூலம் அந்த தனியார் பதிப்பகத்தின் எத்தனை தலைப்புகள் தேர்வாகிஅரசு நூலகங்களுக்குள் சென்றுள்ளன, பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் போன்ற நேரடி அரசியல் பின்னணி கொண்ட நிறுவனங்களுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட புத்தக கொள்முதல் ஆணைகளின் மொத்த மதிப்பு என்ன?
வெளிப்படையான புத்தக கொள்முதல் கொள்கை என்கின்றனர். ஆனால், எந்தெந்த பதிப்பகத்திடம் எவ்வளவு தொகைக்கு எத்தனை புத்தகங்கள் வாங்கப்பட்டன என்ற பட்டியலை எந்த அரசும் வெளியிடுவது இல்லை. மத்திய அரசின் ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின் மூலம் கமுக்கமாக புத்தக கொள்முதல் ஆணைகளை பல பதிப்பகங்கள் பெற்றுள்ளன. இந்த ஆணைகளை வழங்கிய அதிகாரிகள் யார், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, இந்த ஆணைகளை ஏன் இணையதளத்தில் பதிவேற்றவில்லை?
சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி என்ற பெயரில் குறிப்பிட்டஒருசிலர் அடங்கிய குழு பெரும் தொகையை மானியம், அரசு நிதியாகப் பெறுகிறது. அதேபோல, மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்க்க கலைஞர் மருத்துவ நூல் மொழிபெயர்ப்பு திட்டத்தில் பல கோடி ஒதுக்கப்பட்டது. இதுவரை எத்தனை நூல்கள் அச்சாகி வந்துள்ளன.
புத்தக கொள்முதல் என்பது மக்கள் வரிப்பணத்தில், தலைமுறைகளுக்கான வாசிப்பை உருவாக்கும் அறப்பணி. அரசு உடனடியாக இதில் தலை யிட்டு, அனைத்து கொள்முதல் பட்டியல்களையும், வெளிப்படையற்ற கணக்குகளையும் வெள்ளை அறிக்கை வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.