கோப்புப் படம்
சென்னை: சென்னை, கோட்டூர்புரம், சித்ரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (45). கூலி தொழிலாளியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றபோது,தெரு நாய் ஒன்று முருகனின் காலில் கடித்துள்ளது. இதில் காயம் ஏற்பட்டபோதும், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவில்லை.
இதையடுத்து, உறவினர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியதன் பேரில், சம்பவம் நடந்த 2 நாட்கள் கழித்து 14-ம் தேதி சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று, நாய் கடிக்கு முதலுதவி சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை முருகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, முருகனின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.