சென்னை: பயணிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் பூங்கா நகர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உட்பட 13 ரயில் நிலையங்களில் 495 சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி முழுவீச்சில் நடைபெறுகின்றன.
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் உட்பட பல்வேறு புறநகர் ரயில் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவி, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த நிதியாண்டில் மட்டும், எண்ணூர், அத்திப்பட்டு, மீஞ்சூர், பொன்னேரி, கவரைப்பேட்டை, வில்லிவாக்கம், கொரட்டூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, புட்லூர், ஏகாட்டூர், கடம்பத்தூர், செஞ்சி பனம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் மற்றும் மணவூர் ஆகிய 26 ரயில் நிலையங்களில் 923 சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் நிகழ்நேர கண்காணிப்புத் திறனை மேம்படுத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, 13 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, பயணிகள் அதிகம் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய, சிசிடிவி கேமராக்கள் நிறுவி, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
அந்தவகையில், பூங்கா நகர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கத்திவாக்கம், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், அம்பத்தூர், வேப்பம்பட்டு, மோசூர், புளியமங்கலம், திருத்தணி மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட 13 முக்கிய ரயில் நிலையங்களில் 495 சிசிடிவி கேமராக்களை நிறுவும் பணி தற்போது நடைபெறுகின்றன. இதன் மூலம் பயணிகள் மற்றும் செயல்பாட்டு மண்டலங்களில் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.