சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக 9 மின்தூக்கிகள், 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் முக்கிய நிலையங்களில் ஒன்றாக தாம்பரம் ரயில் நிலையம் விளங்குகிறது.
இந்த நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் விதமாக, கூடுதல் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நடைமேடைகள், மேம்பாலங்கள் மற்றும் ரயில் நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுக்கு இடையே பாதுகாப்பான, வசதியான மற்றும் தடையற்ற நடமாட்டத்தை உறுதி செய்வதே தற்போது நடைபெறும் பணிகளின் முக்கிய நோக்கமாகும்.
தற்போது, 9 கூடுதல் மின் தூக்கிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றை வரும் நவம்பருக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய நடை மேம்பாலத்துடன் தொடர்புடைய 10 நகரும் படிக்கட்டுகளை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவற்றை வரும் டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே உள்ள வசதிகளையும் சேர்த்து மொத்தம் 10 மின் தூக்கிகள் மற்றும் 16 நகரும் படிக்கட்டுகள் பயன்பாட்டில் இருக்கும். இது, ரயில் நிலையம் முழுவதும் அணுகல்தன்மையையும் பயணிகளின் நடமாட்டத்தையும் கணிசமாக மேம்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.