

சென்னை: “ரியல் எஸ்டேட் திட்ட ஒப்புதல்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என சென்னையில் நடந்த கிரெடாய் மாநாட்டில் அமைச்சர் ஷாஜகான் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் தமிழ்நாடு அமைப்பின் 5-வது ‘ஸ்டேட்கான் 2026’ இரண்டு நாள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் தொலைநோக்கு பார்வையில் ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு, கட்டுமானத் துறையில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் ஒரு பகுதியாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ‘ஃபேர்பில்ட் 2026’ வணிகக் கண்காட்சியும் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது: தமிழக மக்களின் மாற்றத்துக்கான விருப்பத்தின் பேரில் அமைந்துள்ள இந்த புதிய அரசு, லஞ்சம் மற்றும் ஊழலற்ற ஒரு மாநிலத்தை உருவாக்குவதையே தனது தலையாய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
முதல்வர் விஜய்யின் இந்த உறுதியான நிலைப்பாடு, ரியல் எஸ்டேட் துறையினர் இதுவரை சந்தித்து வந்த சவால்களுக்கு ஒரு நிரந்தர விடிவாக அமையும். ரியல் எஸ்டேட் துறையில் உலகிலேயே எங்கும் இல்லாத அளவு தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
அனைவருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்படும் கட்டுமானத் துறையினருக்கு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்காக, திட்டங்களுக்கான அரசு ஒப்புதல்களை பெறுவதை மேலும் எளிமையாக்கி, விரைவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கை முதல்வரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல்கள் பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கிரெடாய் தமிழ்நாடு தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப் பேசுகையில், “புதிய அரசுக்கும், அதன் இலக்குகளுக்கும் ரியல் எஸ்டேட் துறை முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கும்.
மாநில அரசின் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில், ரியல் எஸ்டேட் துறையின் பங்கு மிக முக்கியமானது. தற்போதைய நிலையில் இத்துறை 8 முதல் 9 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இதை 12 முதல் 13 சதவீதமாக துரிதப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். வலிமையான ரியல் எஸ்டேட் துறை, ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்கும்” என்றார்.