| படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: தமிழகம் முழுவதும் மகளிர் இலவச பயணத் திட்டப் பேருந்துகளில் ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘மகளிர் பயணம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் முதல்வராக ஸ்டாலின் 2021 மே 7-ம் தேதி பதவியேற்றவுடன், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் 9,000 நகரப் பேருந்துகளில் 7,200-க்கும்மேற்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி, சென்னையில் 1,559 சாதாரண கட்டணப் பேருந்து களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எண்ணிக்கை 62% உயர்வு
இதற்கு பெண்களிடம் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதனால், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிட்டு, பேருந்துகளின் முன்னும், பின்னும் பலகை அல்லது டிஜிட்டல் பலகை இடம்பெற்றன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, போக்குவரத்து துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மகளிர் பயணம் திட்டத்தை அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய செயல் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகளிர் இலவச பயணத் திட்ட பேருந்துகளில், ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘மகளிர் பயணம்’ என்று மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளிலும், உடனடியாக பெயர் மாற்றம் செய்யுமாறு போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இது மகளிருக்கான பயணம். எனவே, மகளிர் பயணம் என்று பெயரிடப்பட்டுள்ளது” என்றார். நிர்வாகத்தின் இந்த முடிவால், பயணிகள் சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.