

சென்னை: தவெக எம்எல்ஏ. ஒருவருக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக சந்தேகிக்ப்படும் சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவருக்கு எதிராக சென்னை போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
சட்டப்பேரவையில் பேரவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை ஆதரிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ. இளையராஜா புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை விசாரிக்க போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், இருவரும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.
இதற்கிடையே, கைதானவர்களிடம் போலீஸ் காவலில் விசாரித்தபோது, சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கி ரகசிய ஆலோசனைகள் நடைபெற்றது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்கள் மற்றும் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, கைதானவர்களில் ஒருவர், சிங்கப்பூரில் வசிக்கும் லட்சுமண பெருமாள் என்பவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் சென்னை வந்து இவர்களை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, லட்சுமண பெருமாள் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதையறிந்த லட்சுமண பெருமாள், சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றதுடன், அங்கிருந்தபடியே தொழில்நுட்ப உதவியுடன் சென்னை ஓட்டலின் சிசிடிவி. பதிவுகள் மற்றும் வழக்குக்கு தொடர்புடைய சில டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் வெளிநாடுகளுக்கு மேலும் தப்பிச் செல்லாமல் தடுக்கவும், இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் கைது செய்யவும் சென்னை போலீஸார் அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
மேலும், அவரது செல்போன் பயன்பாடு மற்றும் இருப்பிடத்தை சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். லட்சுமண பெருமாள் கைது செய்யப்பட்டால், இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.