திருப்போரூர்: கேலோ இந்தியா அமைப்பு சார்பில் தென் மாநில அளவிலான மகளிர் சைக்கிள் போட்டிகள் திருப்போரூரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன. இதில், 5 மாநிலங்களைச் சேர்ந்த 330 பெண்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற இப்போட்டிகளை கேலோ இந்தியா அமைப்பின் தென் மண்டலப் பிரிவு நடத்தியது. 14 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டோர், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 5 மாநிலங்களைச் சேர்ந்த 330 பெண்கள் கலந்து கொண்டனர்.
ரூ.1.38 லட்சம் பரிசு: இந்தப் போட்டிகளை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகப் பதிவாளர் லில்லி புஷ்பம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் பொது மேலாளர் எல். சுஜிதா, கோட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர். மொத்தம் ரூ.1.38 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சைக்கிள் சங்கத் தலைவர் எம். சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.