தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த போடூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்துக் கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்.

 
தமிழகம்

பென்னாகரம் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை: கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்

மது விற்ற 3 பேர் கைது

செய்திப்பிரிவு

தருமபுரி: பென்னாகரம் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்த கடைகளை பெண்கள் திரண்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளில் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்யும் சந்துக் கடைகள் ஆங்காங்கே செயல்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற கடைகளால் ஏழை, எளிய மக்களின் குடும்ப பொருளாதாரம், குழந்தைகளின் கல்வி,வீட்டு நிம்மதி ஆகியவை பாழாவதாகக் கூறி காவல்துறையிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இருப்பினும், சந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சந்துக்கடைகளால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்டோர் திரண்டு பென்னாகரம் அடுத்த போடூர் பகுதியில் செயல்படும் 4 சந்துக் கடைகளை நேற்று கல்வீசி தாக்கி நொறுக்கினர்.

மேலும், இவற்றில் ஒரு கடையில் மது விற்பனையில் ஈடுபட்டவர் பெண்களிடம் தகராறு செய்ததால் அவரைத் தாக்க முயன்றனர். இதனால் அவர் மானாவாரி விளை நிலங்களில் குதித்து தப்ப முயன்றபோது பெண்கள் தொடர்ந்து அவரை விரட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீஸார் போடூர் பகுதியில் சந்துக் கடைகள் நடத்தி வந்த மாதேஷ் (59), சவுதா மணி (39), கோவிந்தராஜ் (48) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT