தமிழகம்

மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் சிலிண்டர் வெடித்து விபத்து: பெண் உயிரிழப்பு

13-க்கும் மேற்பட்டோர் காயம்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவின் போது பலூனுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து கலா என்ற பெண் உயிரிழந்தார். 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பொங்கல் பண்டிகையை யொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி மணலூர்பேட்டை மற்றும் சுற்று வட்டார மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது இரவு 7 மணி அளவில் சிறுவர்களுக்கான பலூன் விற்பனை செய்யும் இடத்தில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. உடனே, பலரும் சிதறியடித்து ஓடினர் இதில் பலர் காயமடைந்த நிலையில், விழாவுக்கு வந்திருந்தவர்கள் பதற்றத்தில் தங்கள் உறவினர்களை தேடியலைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணலூர்பேட்டை போலீஸார், காயமடைந்த 13-க்கும் மேற்பட்டோரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனை, அருணை மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பெறுவோரில் 2 சிறுவர்களுக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.கலா (50) என்ற பெண்ணின் இருகால்களும் துண்டான நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, கள்ளக் குறிச்சி எம்பி மலையரசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT