பாலக்காடு: “கேரளம் ஒரு மாற்றத்திற்கான செய்தியை அனுப்பி வருகிறது. கேரளத்தின் மனநிலை இப்போது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறிவிட்டது. கேரள மக்களின் ஆசியுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாலக்காட்டில் இன்று நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் கொள்ளையடிக்கும் பங்குகளை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு, பல தசாப்தங்களாக கேரளாவைச் சூறையாடி வருகின்றன. சில ஆண்டுகள் எல்டிஎஃப் ஆட்சி நடத்தித் தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வது என்றும், பின்னர் அடுத்த சில ஆண்டுகள் யுடிஎஃப் ஆட்சி செய்து கொள்ளையடிப்பது என்றும் இவற்றுக்கிடையே ஒரு மறைமுகப் புரிதல் இருந்து வருகிறது. நமது கேரளம் இவர்களின் இந்தக் கூட்டணிப் பிடியில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது.
பல தசாப்தங்களாக எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்கு மத்தியிலும் அதிகாரத்தைப் பரிமாறிக்கொண்டு வருகின்றன. ஆனால், ஒன்றுக்கொன்று எதிராக ஒருபோதும் நடவடிக்கை எடுத்ததில்லை; மாறாக, மக்கள் முன்னிலையில் வெறும் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகின்றன.
கேரளத்தில் ஏற்படவுள்ள மாற்றமானது, மக்களின் ஆசிர்வாதம், பாஜக தொண்டர்களின் அயராத உழைப்பு மற்றும் அவர்களின் தியாகங்கள் ஆகியவற்றின் மூலமே சாத்தியமாகிறது. பாஜக கேரளாவை ஒரு வளர்ந்த மாநிலமாக மாற்றிக்காட்டும். மோடியின் உத்தரவாதங்கள்' எனும் வலிமையின் துணையோடு இம்மாநிலம் முன்னேறிச் செல்லும். சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜகவே களத்தில் உள்ள 'முன்னணி அணி' (A-team) என்பதை எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் ஆகிய இரு அணிகளுமே ஒப்புக்கொண்டுள்ளன.
கேரளம் பல ஆண்டுகளாக, சுயநல அரசியல் எனும் இருவேறு முகமூடிகளுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறது. ஒருபுறம் கம்யூனிஸ்டுகள், மறுபுறம் காங்கிரஸ்; ஒன்று ஊழல் நிறைந்தது என்றால், மற்றொன்று அதைவிடப் பெரும் ஊழல் நிறைந்தது; ஒன்று வகுப்புவாதச் சிந்தனை கொண்டது என்றால், மற்றொன்று அதைவிடத் தீவிரமான வகுப்புவாதச் சிந்தனை கொண்டது.
இரு கூட்டணிகளின் அனைத்துக் கொள்கைகளும் வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே உள்ளன. கேரளத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பாஜகவின் என்டிஏ கூட்டணியால் மட்டுமே மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் முடியும்.
பாஜக தலைமையிலான அரசாங்கம் கேரளத்தை மிக விரைவிலேயே ஒரு வளர்ச்சியடைந்த கேரளமாக மாற்றும். பாஜக அரசு ஒரு வளர்ச்சியடைந்த கேரளத்தை உருவாக்கும் என்று நான் இப்போது உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது மோடியின் உத்தரவாதம்.
இந்த முறை கேரளத்தில் ஒரு மாறுபட்ட சூழலை நான் காண்கிறேன். கேரளம் ஒரு மாற்றத்திற்கான செய்தியை அனுப்பி வருகிறது. இன்று நீங்கள் வெளிப்படுத்தும் உற்சாகமும் ஆதரவு மற்றும் நீங்கள் இவ்வளவு திரளாக இங்கே கூடியிருப்பது ஆகிய அனைத்தும் பாஜகவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. கேரளத்தின் மனநிலை இப்போது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறிவிட்டது என்பதையே காட்டுகின்றன. கேரள மக்களின் ஆசியுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதனை இந்த மக்களின் எழுச்சி காட்டுகிறது” என்றார்.