காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை சட்டப் போராட்டம் மூலம் தடுப்போம் என்று எதிர்ப்பு போராட்டக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பரந்தூர் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் ஜி. சுப்பிரமணியன், செயலாளர் எஸ்.டி. கதிரேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து சாதி, மதம் கடந்து நாம் அனைவரும் காட்டி வரும் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம். இந்த ஒற்றுமையால்தான் ஏகனாபுரம் கிராமத்துக்குள் தமிழக அரசால் இதுவரை ஓர் அடி கூட முன்னேற முடியவில்லை. இது நமது போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
ஆளும் கட்சியைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் நமது போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது நமக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது. மக்களின் சம்மதம் இன்றி இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதை அரசு நன்கு உணர்ந்துள்ளது. அதே வேளையில், பாதிக்கப்படும் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை. நமது மண்ணைக் காக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் நம் தரப்புக்காக வாதாடுகிறார். இந்த வழக்கு உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல்வேறு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. எனவே, அரசு நினைத்ததை இங்கே எளிதில் நடைமுறைப்படுத்த முடியாது. சட்டப் போராட்டத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெற்று நமது விவசாய நிலங்களையும், கிராமத்தையும் காப்போம். வழக்கின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து கிராமக் கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.