சென்னை: ‘சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க நாங்கள் உறுதியாக இருப்போம்’ என்று கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆற்காடு நவாப், பிரம்ம குமாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பலர் விஜய்க்கு பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த குழந்தைகளுடன் சேர்ந்து விஜய் கேக் வெட்டி அவர்களுக்கு ஊட்டினார், குழந்தைகளும் விஜய்க்கு கேக் ஊட்டினர். அவர்களுக்கு பரிசுகளையும் விஜய் வழங்கினார்.
விழாவில் விஜய் பேசியது: அன்பும் கருணையும்தான் அனைத்துக்கும் அடிப்படை. இவை இரண்டும் இருப்பதுதான் தாய் மனது. நம் தமிழக மண்ணும் அப்படிப்பட்ட தாய் அன்பு கொண்ட மண். தாய்க்கு அனைத்து பிள்ளைகளும் ஒன்றுதான். பொங்கல், தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளையும் பகிர்ந்வதுதான் நம் ஊர்.
வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறுவேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தான். நான் அரசியலுக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கை உள்ளது என அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித்தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தால் அனைத்து பிரச்சினைகளையும் வெல்லலாம்.
நம்பிக்கை குறித்து பல கதைகள் பைபிளில் உள்ளன. அவற்றில் ஒன்று - ஒரு இளைஞரை அவரது சகோதரர்கள் கிணற்றில் தள்ளிவிடுகிறார்கள் அதிலிருந்து மீண்ட இளைஞர் நாட்டுக்கே அரசனாகி, துரோகம் செய்த சகோதரர் மட்டுமின்றி அந்த நாட்டையே எப்படி காப்பாற்றினார் என்பதைக் கூறுகிறது.
இந்த கதை யாரை குறிக்கிறது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. கடவுளின் அருள், மக்களை மானசீகமாக நேசிக்கும் அன்பு, அதீத வலிமை, அதற்கான உழைப்பும் இருந்தால் எதிரிகளை வீழ்த்தலாம் என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.
ஒரு உறுதியை கொடுக்க விரும்புகிறேன். நானும் தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதற்காகத்தான் நமது கொள்கைக்கு மதச்சார்பற்ற கொள்கை எனப் பெயர் வைக்கப்பட்டது. கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அது நம்மை வழிநடத்தும் உறுதியாக இருங்கள், வெற்றி நிச்சயம். இவ்வாறு பேசினார்.
அரசை பாராட்டிய நவாப்: இந்நிகழ்ச்சியில் ஆற்காடு நவாப் முகமது ஆசிப் அலி திவான் பேசும்போது, “நமது மாநிலம் ஒற்றுமைக்குச் சிறந்த உதாரணமாகவும், மனித நேயத்தை மதிக்கும் மாநிலமாகவும், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கும் மாநிலமாகவும் உள்ளது. மேலும், பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் திகழ்கிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் 2-வது இடத்தில் உள்ளது” என பாராட்டி பேசினார்.
தமிழக அரசை விஜய் கடுமையாக விமர்சிக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியில் தமிழக அரசைப் பாராட்டி ஆற்காடு நவாப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.