தமிழகம்

பழநி தேவஸ்தானத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவாரா?

சொத்துகளை பாதுகாக்க, சவால்களை எதிர்கொள்ள...

ஆ.நல்லசிவன்

பழநி: சவால்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், கோயில் சொத்துகளை பாதுகாக்கவும் பழநி தேவஸ்தானத்தில் காலியாக உள்ள இணை ஆணையர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வருமானம் தரக்கூடிய கோயில்களில் பழநி முருகன் கோயில் முக்கிய இடத்தில் உள்ளது. இக்கோயில் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 55 கோயில்கள் உள்ளன.

இது தவிர பக்தர்கள் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், மனநலக் காப்பகம், சித்த மருத்துவமனை, 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், கோசாலை, கருணை இல்லம், வேதம் மற்றும் நாகஸ்வர பாடசாலைகளும் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன.

இக்கோயிலில் இணை ஆணையராக பணியாற்றி வந்த மாரிமுத்து, ஜூலை 10-ம் தேதி கூடுதல் ஆணையராக பதவி உயர்வு பெற்று சென்னை சென்றார். தொடர்ந்து, துணை ஆணையர் வெங்கடேஷ் முழு கூடுதல் பொறுப்பாக இணை ஆணையராக செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கோயிலில் உதவி ஆணையராக (நிர்வாகம்) இருந்த லட்சுமி, துணை ஆணையராக பதவி உயர்வு பெற்று, வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றார்.

பின்னர், உதவி ஆணையர் (கோயில்) செந்தில்குமார் கூடுதல் பொறுப்பாக நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அவரும் கடந்த ஜூலை 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். தற்போது இணை ஆணையர், உதவி ஆணையர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அனைத்து பணிகளையும் பொறுப்பு இணை ஆணையரே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.

பதவிக்கு வர தயக்கம்

இதன் காரணமாக, கோயில் மட்டுமின்றி அனைத்து நிர்வாகப் பணிகளும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலப்பதிவு முறைகேடு பிரச்சினை பெரியதாக பேசப்படும் முன்பு வரை, பழநி தேவஸ்தானத்தில் காலியாக இருக்கும் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் பதவிக்கு அறநிலையத்துறை அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவியது.

தற்போது ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்துக்கு பிறகு இணை ஆணையர், உதவி ஆணையர் பதவிக்கு வர அறநிலையத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்களை சமாளிப்பது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது, கோயில் சொத்துகளை பாதுகாப்பது என தினமும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது தேவஸ்தான நிர்வாகத்துக்கு சவாலாக இருந்து வருகிறது.

பிரச்சினைகளை கையாண்டது, பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பது, ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் சொத்துகளை மீட்டதில் முன்பிருந்த இணை ஆணையர் மாரிமுத்து சிறப்பாக பணியாற்றினார். அவரை போன்று இல்லாவிட்டாலும் தினமும் நேரும் சவால்களை சமாளிக்கும் திறன், தலைமை பண்பு கொண்ட ஒருவரை இணை ஆணையராக நியமிக்கும் எண்ணத்தில் அறநிலையத்துறை உள்ளது.

அதே நேரம், இங்குள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், கோயில் சொத்துகளை பாதுகாக்கவும் ஐ.ஏ.எஸ். அந்தஸ்திலான அதிகாரிகளால் மட்டுமே இயலும்.

எனவே, இணை ஆணையர் பதவிக்கு மீண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும், காலியாக உள்ள உதவி ஆணையர்கள் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்று பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்பு ஐ.ஏ.ஏஸ். அந்தஸ்திலான அதிகாரிகளான ஜெயசந்திர பானு ரெட்டி (2019), கிராந்திகுமார்பாடி (2020) ஆகியோர் இணை ஆணையர்களாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT