குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் தனித் தொகுதியாக இருந்த குன்னூர் சட்டப்பேரவை தொகுதி, கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
2008-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியில், குன்னூர் மற்றும் கோத்தகிரி நகராட்சி, அதிகரட்டி, உலிக்கல் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன.
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டங்களில் காய்கறி மற்றும் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இத்தொகுதியில் படுகரின மக்கள், இந்து, இஸ்லாமியர்களும், இருளர் மற்றும் குறும்பரின பழங்குடியினரும், தாயகம் திரும்பியோர் கணிசமாக வசிக்கின்றனர்.
முக்கிய பிரச்சினைகள்
தேயிலை தோட்டங்கள் நிறைந்த குன்னூர் தொகுதியில், தேயிலை தொழிலைச் சார்ந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சியால் பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் விற்கப்பட்டு வருகின்றன.
இவற்றை வாங்குபவர்கள் தேயிலை தோட்டங்களை அழித்து ஆடம்பர பங்களாக்களை கட்டி வருகின்றனர். இதனால் உள்ளூர் மக்கள் வேலை வாய்ப்பினை இழந்து பிழைப்பு தேடி சமவெளிப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
பசுந்தேயிலைக்கு ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டாலும் இதுவரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. குன்னூர் நகரில் குடிநீர் பிரச்சினை பிரதானமாக உள்ளது.
குன்னூர் நகரின் நுழைவுவாயிலில் மலை ரயில் பாதை அமைந்துள்ள நிலையில், மலை ரயில் வரும் போது, ரயில்வே கேட் மூடப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது குன்னூர் தொகுதிவாசிகளின் நீண்டநாள் கோரிக்கை.
தாயகம் திரும்பிய தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டான்டீ எனப்படும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் குன்னூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாத அவல நிலை நீடிக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான பணி வழங்கப்படாததால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
குன்னூரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும், பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதும் பிரதான கோரிக்கையாக உள்ளன.
களம் காணும் வேட்பாளர்கள்
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் கே.எம்.ராஜூ, அதிமுக சார்பில் சாந்தி அ.ராமு, நாம் தமிழர் கட்சி சார்பில் கே.தீனு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சி.தங்கராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் கே.எம்.ராஜூ அக்கட்சியின் மாவட்டச் செயலராக உள்ளார். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு, படுகர் இன மக்களின் ஆதரவு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை போன்ற அரசின் நலத் திட்டங்கள் திமுக வேட்பாளருக்கு சாதகமாக உள்ளன.
அதிமுக வேட்பாளர் சாந்தி அ.ராமு 2016-ம் ஆண்டில் போட்டியிட்டு திமுக வேட்பாளரை வென்றவர். இவர் கோத்தகிரி அரவேணு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அங்குள்ள படுகர் இன மக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெளியூர் வேட்பாளர்கள் என்பதும், அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்பதும் பலவீனமாக உள்ளது. இருப்பினும், முதன்முறை வாக்காளர்கள் மற்றும் மாற்று அரசியல் நாடுபவர்களின் வாக்குகளை இவர்கள் கவர வாய்ப்புள்ளது.
திமுக 9 முறை வெற்றி
குன்னூர் தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 15 தேர்தல்களில், திமுக 9 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தமாகா(மூ) ஒரு முறையும் வென்றுள்ளன.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 4 தேர்தல்களில், 2016 தவிர மற்ற தேர்தல்களில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் தொகுதியைத் தக்க வைக்க திமுக கடுமையாக உழைக்க வேண்டிய நிலையில் உள்ளது.
வாக்காளர்கள் விவரம்:
ஆண் - 83,045
பெண் - 92,768
3-ம் பாலினத்தவர் - 7
மொத்த வாக்காளர்கள் - 1,75,820