கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் உள்ள பாலமுருகன் கோயில் அன்னதான கூடத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தி விட்டு சென்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு மாடு, யானை, சிறுத்தை, புலி உள்பட ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன. அவை, பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றன. அப்போது, விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தாண்டிக்குடியில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர் சாலையில் உலா வரும் யானைகளால் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இன்று (டிச.12) அதிகாலை 2 மணியளவில் உணவைத் தேடி, தாண்டிக்குடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பாலமுருகன் கோயிலுக்கு வந்த 2 யானைகள், அங்குள்ள சமையல் அறை மற்றும் உணவு சமைத்து வைக்கப்படும் அறையை உடைத்து சேதப்படுத்தின.
மேலும், உணவு சமைப்பதற்காக வைத்திருந்த அரிசி, பருப்பை யானைகள் சாப்பிட்டுள்ளன. இரவு நேரத்தில் அன்னதான கூடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் இல்லை. கோயிலில் தங்கியிருந்த பூசாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் காட்டு யானைகளை வனத்துறையினர் அங்கிருந்து விரட்டினர்.
காட்டு யானைகள் இனி அரிசி, பருப்பை உண்பதற்காக அடிக்கடி வரும் என்பதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். யானைகள் மீண்டும் வராமல் வனத்துறையினர் தடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.