காங்கிரஸ் மூத்த தலைவர் சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்

சிவ்ராஜ் பாட்டீல்

சிவ்ராஜ் பாட்டீல்

Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (டிச.12) காலை மகாராஷ்டிரா மாநிலம் லட்டூரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகன், மருமகள், இரண்டு பேத்திகள் உள்ளனர். சிவ்ராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவ்ராஜ் பாட்டீல் கடந்த 1935-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி பிறந்தார். அவர் பிறந்த லட்டூரில் நகராட்சி மன்றத் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 1970களில் எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து லட்டூரில் இருந்து 7 முறை எம்பியாக தேர்வாகும் அளவுக்கு மக்கள் அபிமானத்தைப் பெற்றிருந்தார்.

1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகராகவும் இருந்துள்ளார். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் அவர் தான் வகித்துவந்த உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

பாட்டீல் பஞ்சாப் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். 2010 முதல் 2015-ம் ஆண்டு வரை சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகப் பணியாற்றினார்.

அவரைப் பற்றி காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில், “சிவ்ராஜ் பாட்டீல் தன் வாழ்நாள் முழுவதும் அரசியல் மேடைகளிலோ, இல்லை தனிப்பட்ட உரையாடல்களிலோ யார் மீதும் தனிநபர் விமர்சனங்களை முன்வைத்துப் பேசியதில்லை. அத்தகைய அரசியல் நாகரிகம் கொண்டவர் அவர். சிறந்த வாசிப்பாளர். மராத்தி, ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றவர். இந்திய அரசியல் சாசன நுணுக்கங்கள் பற்றி நன்கு அறிந்தவர். தான் வாழ்ந்த காலத்தில் சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருந்திருக்கிறார்.” என்று கூறப்படுகிறது. 

சிவ்ராஜ் பாட்டீல் மறைவுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிடத் தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் லட்டூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in