சென்னை: சென்னையில் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டதுடன், போலீஸார் தாக்கியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சிராணி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் காலவரையற்ற மறியல் போராட்டம் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
சென்னையில் 3 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் போராட்டம் தொடர்ந்தது. இதில் சங்கத்தின் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இரவு 7 மணியளவில் அங்கிருந்து திருமங்கலத்தில் உள்ள சமுதாய கூடத்துக்கும் கிளாம்பாக்கத்துக்கும் கொண்டு சென்றனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கவே நள்ளிரவு 2 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவர்களை போலீஸார் விட்டுவிட்டுச் சென்றனர்.
இதற்கிடையே இருந்த சங்கத்தின் மாநில தலைவர்கள் உள்பட 40 பேரை காவல்துறையினர், நள்ளிரவு 1 மணியளவில் வலுக்கட்டாயமா பேருந்துகளில் ஏற்றினர். அப்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.ஜான்சி ராணியை குண்டுக்கட்டாக தூக்கி ஏற்றியதில், அவருக்கு காயம் ஏற்பட்டு, மயக்கமடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜான்சிராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவியாவார்.
இதன்தொடர்ச்சியாக இச்சம்பவத்தைக் கண்டித்து சங்கத்தின் சார்பில் கோயம்பேட்டில் மறியல் நடைபெற்றது. இச்சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மனைவி படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோரிக்கைக் குரல்களை ஒடுக்க நினைப்பது திமுகவின் பாசிச மனோபாவத்துக்கான சாட்சி. இந்தத் தாக்குதல்கள் கண்டனதுக்குரியது.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: தண்ணீரோ, உணவோ வழங்காமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்து, தாக்கி சித்ரவதை செய்து காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. இந்த மோசமான நடவடிக்கைகளுக்கு காரணமான போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரும் மாற்றுத் திறனாளிகள் மீதான போலீஸாரின் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் வாபஸ்: இதற்கிடையே மே மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே பாரமரிப்புத் தொகை உயர்த்தப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்திருப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருவதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.