சென்னை: தமிழக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த 30 சதவீத இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 6-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு விஏஓ பதவிக்கு வயது வரம்பு 40 ஆகவும், இளநிலை உதவியாளர் பதவிக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 பதவிகளுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டம் என கூடுதல் கல்வித் தகுதி கொண்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு தளர்த்தப்படுகிறது. ஆனால், பொதுப் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு காரணமாக, கூடுதல் கல்வித் தகுதி இருந்தும் அப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளால் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தவிர, சில பதவிகளுக்குப் பட்டப் படிப்பு அடிப்படை கல்வித் தகுதியாக இருப்பதால், பிளஸ் 2 கல்வித் தகுதி மட்டுமே கொண்டவர்களால் அப்பதவிகளுக்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், பிளஸ் 2 கல்வித் தகுதியுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வை நம்பிப் படித்து வரும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
கணவரை இழந்து, குடும்பப் பொறுப்புகளையும் சுமந்து அதோடு பொருளாதாரச் சவால்களையும் எதிர்கொண்டு வரும் ஆதரவற்ற விதவைகளுக்கு அரசு வேலை என்பது மிகவும் அவசியமானது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தேர்வர்கள் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை மட்டுமே நம்பி பல ஆண்டுகளாக கடினமாகப் படித்து வரும் எங்களைப் போன்ற பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள், வயது வரம்பு காரணமாக குரூப்-4 தேர்வு எழுதும் வாய்ப்பை இழப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. நாங்கள் அரசுப் பணியில் இடஒதுக்கீடு கேட்கவில்லை.
தேர்வு எழுத மற்ற பிரிவினரைப் போல எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். எனவே, எங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு விஏஓ மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளுக்கான வயது வரம்பைத் தளர்த்தி, கூடுதல் கல்வித் தகுதி பெற்றுள்ள அனைவருக்கும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்குமாறு தமிழக அரசையும், டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். எங்களது வாழ்வாதாரம், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.