தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் 9 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை தொடங்கி உள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது, மேலும் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால், ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தொய் வடைந்துள்ளது. சில இடங்களில் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. அதேநேரம், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியதாவது: சம்பா நெல் அறுவடையை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக முடிக்க தயாராக இருந்த நேரத்தில், கடந்த வாரம் பனிப் பொழிவு அதிகமாக இருந்தது.
இதனால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து காணப்பட்டதால், அறுவடை தாமதமானது. இந்நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், அறுவடை இயந்திர வாகனங்களை வயலில் இறக்க முடியவில்லை. இதனால், அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
பொங்கலுக்குள் அறுவடையை முடித்தால், அந்த பணத்தைக் கொண்டு பண்டிகையை விவசாயிகள் சிறப்பாகக் கொண்டாடியிருப்பார்கள். மழை குறைந்தால்தான் அறுவடை தீவிரமடையும். இவ்வாறு அவர் கூறினார்.
நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால், பல இடங்களில் சம்பா அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளதுடன், நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் விவசாயி கள் கவலையடைந்துள்ளனர்.