உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: பெரும்பாலான மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் புகையிலைப் பயன்பாட்டுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஆர். மணிபாரதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாட்டில் 13 முதல் 15 வயதுடைய பள்ளி மாணவர்களில் 8.5 சதவீதம் பேர் பல்வேறு வடிவங்களில் புகையிலையைப் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள கடைகளில் புகையிலை வகைகள் பெருமளவில் விற்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
குட்கா, பான் பராக், பான் மசாலா போன்ற மெல்லும் புகையிலை வகைகளில் 4,000-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது 40 வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. மெல்லும் புகையிலை பயன்பாடு, பல்வேறு வகையான புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களுக்கான முக்கியக்காரணிகளில் ஒன்றாக உள்ளது.
மெல்லும் மற்றும் நுகரப்படும் புகையிலையில் ‘நிக்கோட்டின்’ வேதிப்பொருள் உள்ளது. இது வாய் அல்லது மூக்கின் திசுக்கள் வழியாக உறிஞ்சப்படுகிறது. இது பக்கவாதம், வாய் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. தமிழகத்தில் 2023 நவம்பர் முதல் 2024 செப்டம்பர் வரை போலீஸார் நடத்திய சோதனையில் 12,336 கிலோ கூல்லிப் உள்பட 1 லட்சத்து 27,561 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. எனவே, தமிழகத்தில் பள்ளிகளில் புகையிலை இல்லாத கல்வி நிறுவன வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த குழந்தைகளுக்கான புகையிலை தடுப்பு மையம் அமைத்து உளவியலாளரை நியமிக்க வேண்டும்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் குறைந்தது இரு முறையாவது வாய்வழி- பல் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பெருட்கள் விற்பனை தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசும், பெரும்பாலான மாநிலங்
களில் புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டுக்குத் தடை இருக்கும்போது நாடு முழுவதும் ஏன்தடை விதிக்கக் கூடாது என்பது தொடர்பாக மத்திய அரசும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.