தமிழகம்

ஒதுங்கினாரா அல்லது ஒதுக்கப்பட்டாரா அண்ணாமலை? - ஆத்திரத்தில் கொதிக்கும் ஆதரவாளர்கள்

துரை விஜயராஜ்

தமிழக அரசி​யலில் அரை நூற்​றாண்டு கால​மாக அசைக்க முடி​யாத சக்​தி​யாக விளங்​கும் திரா​விட சித்​தாந்​தங்​களுக்கு மாற்​றாக, ஒரு தேசி​யக் கட்​சி​யால் விஸ்​வரூபம் எடுக்க முடி​யுமா என்ற கேள்விக்கு 'அண்​ணா​மலை' என்ற ஒற்​றைப் பெயர் விடை​யாய் உரு​வெடுத்​தது.

1980-களில் விதைக்​கப்​பட்ட பாஜக, தமிழக மண்​ணில் வேர் பிடிக்க நான்கு தசாப்​தங்​களாகப் போராடியது. 1996-ல் பத்​ம​நாபபுரம் தொகுதி மூலம் தனது கணக்​கைத் தொடங்​கி​யிருந்​தா​லும், திரா​விடக் கட்​சி​களின் ‘தோள் மீது ஏறி’ பயணிப்​பதே அக்​கட்​சி​யின் நீண்​ட​கால வியூ​க​மாக இருந்து வந்​தது.

          

முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி​யான அண்​ணா​மலை மாநிலத் தலை​வ​ராகப் பொறுப்​பேற்​றதும், தமிழக பாஜக-​வின் அரசி​யல் முகம் முற்​றி​லு​மாக மாறியது. பழைய பாணி ‘அறிக்கை அரசி​யலை’ ஓரம் கட்​டி​விட்​டு, ஆளுங்​கட்​சி​யைத் தரவு​களு​டன் மிரட்​டும் ‘நேரடி மோதல்’ போக்கை அவர் கையாண்​டார்.

‘என் மண் என் மக்​கள்’ என்ற நெடும்​பயணம் மூலம் தாமரைக் கொடியை குக்​கி​ரா​மங்​கள் வரை கொண்டு சென்​றார். இதன் அறு​வடை​யாக, 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக கூட்​டணி இரட்டை இலக்க வாக்கு சதவீதத்​தைப் பெற்​றது. பல தொகு​தி​களில் அதி​முக-வையே மூன்​றாம் இடத்​துக்​குத் தள்​ளியது அண்​ணா​மலை​யின் ஆளு​மைக்​குக் கிடைத்த அங்​கீ​கார​மாகப் பார்க்​கப்​பட்​டது.

2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக-வுடன் மீண்​டும் கரம் கோக்க டெல்லி மேலிடம் ஆர்​வம் காட்​டியது. ஆனால், "அதி​முக-​வுடன் இனி ஒரு​போதும் உறவில்​லை" என்ற அண்​ணா​மலை​யின் பிடி​வாத​மான ‘தனி வழி’ கோட்​பாடு, கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தைக்​குப் பெரும் முட்​டுக்​கட்​டை​யானது. "வாக்கு சதவீதத்தை விட, தொகு​தி​களைக் கைப்​பற்றி சட்​டப்​பேர​வைக்​குள் நுழைவதே தேசிய அளவில் கட்​சிக்​குப் பலம்" என்ற அமித் ஷாவின் ‘யதார்த்த அரசி​யல்’ கணக்கு இங்கே தான் அண்​ணா​மலை​யுடன் முரண்​பட்​டது.

2024-ல் வாக்​கு​கள் அதி​கரித்​தா​லும் ஒரு இடத்​தைக் கூட வெல்ல முடி​யாதது அண்​ணா​மலைக்​குக் கடுமை​யான பின்​னடை​வாக அமைந்​தது. இதன் விளை​வாக, தேர்​தல் வெற்​றியை மட்​டுமே குறிக்​கோளாகக் கொண்ட டெல்லி தலை​மை, தேர்​தல் களத்​தில் அனுபவம் கொண்ட நயி​னார் நாகேந்​திரனைத் தலை​வ​ராக்கியது. ஆனால், பாஜக கூட்​டங்​களில் இப்​போதும் அண்​ணா​மலைக்கு அபரிமித​மான ஆதரவு இருக்​கிறது.

இந்​நிலை​யில், அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜக போட்​டி​யிடும் 27 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர் பட்​டியல் நேற்று வெளி​யானது. இதில் அண்​ணா​மலை​யின் பெயர் இடம்​பெறாதது, அவரது ஆதர​வாளர்​கள் மத்​தி​யில் பேரிடி​யாக இறங்​கி​யுள்​ளது. அவர் ‘கட்​டம்​கட்​டப்​பட்​டு​விட்​டார்’ என்ற முணு​முணுப்​பு​கள் பாஜக வட்​டாரத்​தில் பலமாக எதிரொலிக்​கின்​றன. கோவை வடக்கு அல்​லது சிங்​காநல்​லூர் தொகு​தி​யில் அண்​ணா​மலை போட்​டி​யிடக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்ட நிலை​யில், அவருக்கு வாய்ப்பு மறுக்​கப்​பட்​டிருப்​பது அவரது விசு​வாசிகள் முன்​வைக்​கும் பிர​தான குற்​றச்​சாட்​டாக உள்​ளது.

அண்​ணா​மலை மட்​டுமல்​லாது, அவரது தீவிர ஆதர​வாளர்​களுக்​கும் வாய்ப்​பு​கள் மறுக்​கப்​பட்​டுள்​ளது கூடு​தல் விவாதங்​களைக் கிளப்​பி​யுள்​ளது. குறிப்​பாக, அமர்​பிர​சாத் ரெட்​டி, அஸ்​வத்​தாமன், ஏ.பி.​முரு​கானந்​தம், வினோஜ் பி.செல்​வம் மற்​றும் எஸ்​.ஜி.சூர்யா ஆகி​யோ​ருக்கு வாய்ப்பு வழங்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​பட்ட நிலை​யில் அவர்​கள் பெயர் பட்​டியலில் இல்​லை.

திருப்​பூர் தொகு​தி​யில் வெற்றி வாய்ப்பு அதி​க​மாக இருந்த ஏ.பி.​முரு​கானந்​தத்​துக்​குப் பதில் புது​முகம் ஒரு​வ​ருக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டது, கட்​சிக்​குள் ‘அண்​ணா​மலை அணி’ திட்​ட​மிட்டு ஓரங்​கட்​டப்​படு​வதையே காட்​டு​வ​தாக அரசி​யல் விமர்​சகர்​கள் கருதுகின்​ற​னர்.

இதன் பின்​னணி​யில் பழனி​சாமி, அமித் ஷா மற்​றும் நிர்​மலா சீதா​ரா​மன் ஆகி​யோரின் ‘கூட்டு வியூ​கம்’ இருப்​ப​தாக அண்​ணா​மலை​யின் ஆதர​வாளர்​கள் புழுங்​கு​கி​றார்​கள். எனினும், மற்​றொரு தரப்​போ, சித்​​தாந்​தத்​துக்​​காகத் தசாப்​தங்​களாக உழைக்​கும் சாதா​ரணத் தொண்​டர்​களுக்கு இந்​தப் பட்​டியலில் அங்​கீ​காரம் கிடைத்​துள்​ள​தாக சமா​தானம் கொள்​கிறது.

SCROLL FOR NEXT