பொன்முடி, திருமாவளவன், சி.வி.சண்முகம்

 
தமிழகம்

திருமாவளவன், பொன்முடி மீது சி.வி.சண்முகத்துக்கு திடீர் ‘பாசம்’ ஏன்?

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக லட்சுமணன் போட்டியிடுகிறார். அதிமுகவில் மாவட்ட செயலாளராக பதவி வகித்த இவர், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக செயல்பட்டார்.

ஓபிஎஸ் அணியில் இருந்ததால் இவரது பதவி பறிக்கப்பட்டு, சி.வி.சண்முகம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதும், லட்சுமணன் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து லட்சுமணன் திமுகவில் தஞ்சமடைந்தார். அவருக்கு 2021-ல் திமுக சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

சி.வி.சண்முகத்துக்கு எதிராக களம் இறக்கப்பட்டார். அவர் சி.வி.சண்முகத்தை வீழ்த்தினார். தற்போது திமுக சார்பில் போட்டியிட லட்சுமணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக போட்டியிட, தனது விசுவாசியான கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு மனைவி விஜயாவுக்கு வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளார் சி.வி.சண்முகம்.

          

திமுக ஆட்சியின் சாதனை, சமுதாய பலம் என்று அசுர பலத்துடன் உள்ள லட்சுமணனை எளிதாக வீழ்த்த முடியாது என்பதை சி.வி.சண்முகம் உணர்ந்துள்ளார். இதனால், அவருக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை ஈர்க்க, புதிய வியூகத்துடன் செயல்பட தொடங்கி இருக்கிறார்.

இதன் வெளிப்பாடுதான் விழுப்புரத்தில் இரு தினங்களுக்கு முன் இரவு நடைபெற்ற அதிமுக வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு அறிமுக கூட்டத்தில் திருமாவளவன் மற்றும் பொன்முடி மீது திடீர் பாசமழையை சி.வி.சண்முகம் பொழிந்துள்ளார். அப்போது அவர் பேசும்போது, “விசிக தலைவர் திருமாவளவன் யாரையும் தவறாக பேசமாட்டார்.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருக்கலாம். யாரையும் தரம் தாழ்ந்து பேசமாட்டார். அதிமுகவின் வலிமையை உயர்த்தி பேசக்கூடியவர். இப்படிப்பட்டவர் மன உளைச்சலில் இருக்கிறார். விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் யார் போட்டியிட வேண்டும் என திமுக தீர்மானிக்கிறது.

‘மாநில அரசியலுக்கு வர வேண்டும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்' என்ற அவரது விருப்பத்தை தடுத்தது யார்? தமிழகத்தில் பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் மாநில அரசியலில் கோலோச்ச கூடாதா? தன் மகனுக்கு யாரும் அரசியலில் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பது முதல்வர் ஸ்டாலினின் எண்ணம்.

எல்லோரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற சர்வாதிகார எண்ணம் கொண்டவர். இதேபோல் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை எடுத்துக் கொள்ளலாம். அவருக்கும், நமக்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் திமுகவுக்காக உழைத்தவர் பொன்முடி. பல்வேறு வழக்குகளை சந்தித்தவர்.

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேருக்கு நேராக எதிர்த்து பேசியவர். இப்படிப்பட்ட நபருக்கு இப்போது என்ன நிலைமை? முதல்வர், அவரது மகன் மற்றும் அமைச்சர், அவரது மகன் என தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் பொன்முடி மட்டும் நிற்க கூடாதா? இதுதான் திமுக. பிழிந்து எடுத்துக்கொண்டு சக்கையாக வீசிவிடுவார்கள்.

ஆனால் அதிமுக அப்படி கிடையாது. காலம் தாழ்ந்தாலும் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும்” என்றார்.சி.வி.சண்முகத்தின் புதிய யுக்தி அதிமுக வேட்பாளர் விஜயாசுரேஷ்பாபுவுக்கு பலம் கொடுக்குமா? என்பதை தெரிந்துகொள்ள காத்திருப்போம்.

SCROLL FOR NEXT