புதுடெல்லி / சென்னை: ‘சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை மீனவர்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு 2 வார காலத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்ததை எதிர்த்து மீனவர்கள் மற்றும் மீனவர் அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டல கடற்பரப்பில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கி செப்.2-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சுருக்குமடி வலையை எடுத்துச்செல்ல தமிழக அரசு அனுமதிக்க வில்லை எனக்கு கூறி விழுப்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள், உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மீனவர்கள் வழக்கறிஞர் ஜெய்சுகின் ஆஜராகி, ‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னரும் சுருக்குமடி வலையை எடுத்துச்செல்ல தமிழக அரசு அனுமதிப்பதில்லை.
சுருக்குமடி வலையுடன் மீனவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டல கடற்பகுதிக்குச் செல்வதற்கான அனுமதிகளை தமிழக அரசு வழங்காமல் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
எனவே இதுதொடர்பாக உரிய உத்தரவை தமிழக அரசுக்கு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘மீன்பிடி தடைக்காலம் இல்லாத நிலையிலும் சுருக்குமடி வலையை எடுத்துச்செல்ல ஏன் அனுமதிக்கவில்லை?.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் சுருக்குமடி வலையை முழுமையாகத் தடுப்பதை ஏற்க முடியாது.
இந்த விவகாரத்தை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. தமிழக அரசின் இந்த செயல்பாடு சரியானது அல்ல. இதுகுறித்து தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.