படம்: மு.லெட்சுமி அருண்
மதுரை: திருச்செந்தூர் கோயில் தரிசனக் கட்டண முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் முறையாக கண்காணிக்காமல் இருந்தது எப்படி என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 100 ரூபாய் தரிசனக் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சத்து 24,100 முறைகேடு நடந்தது தொடர்பாக தற்காலிக ஊழியர் மேனகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த முறைகேடு தொடர்பாக கணினியில் அச்சிடப்பட்ட சீட்டுகளை ஒப்பிட்டு பார்க்காமல் அலட்சியமாக இருந்ததாக கோயில் பணியாளர்கள் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை நீதிபதி பி.தனபால் விசாரித்து திருச்செந்தூர் கோயிலில் ரூ.25 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது. இதை முறையாகக் கண்காணிக்காமல் உயர் அதிகாரி என்ன செய்து கொண்டிருந்தார், தரிசனக் கட்டணம் எவ்வளவு வசூல் ஆகிறது என்பது கோயில் அதிகாரிகளுக்குத் தெரியாதா, கோயிலுக்கு தினமும் எவ்வளவு வருமானம் வருகிறது என கோயில் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது.
மனுதார்களை மட்டும் எப்படிபொறுப்பாக்க முடியும். மனுதாரர்களின் பணி தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஜூன் 8-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.