திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பில்லூரில் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திய வேளாண் துறை மாநில திட்ட துணை இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தலைமையிலானஅதிகாரிகள் குழுவினர்.
தஞ்சாவூர்/ மயிலாடுதுறை: மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து செயலி முறையில் கணக்கெடுப்பு நடத்துவதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், பழைய முறையிலேயே கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் டிட்வா புயலால் 2,11,239 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற தமிழக அரசு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து CROP DAMAGE ASSESSMENT என்ற செயலி மூலம் வேளாண் அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.
இதன்படி, பயிர் பாதிக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று, புல எண், உட்பிரிவு ஆகியவற்றை குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படத்தை ஜிபிஆர்எஸ் உதவியுடன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவேற்றப்பட்ட விவரங்களை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் சரிபார்த்து அங்கீகரித்த பிறகே பயிர்கள் பாதிக்கப்பட்ட பட்டியலில் சேரும். இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மண்டல ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் வேட்டங்குடி பி.சீனிவாசன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் பெற, விவசாயிகள் தங்களது நிலத்தில் நின்று ஜிபிஆர்எஸ் இணைப்புடன் புகைப்படம் எடுத்து, அதில் காண்பிக்கும் எண்ணை குறிப்பிட்டு, மீண்டும் ஒரு முறை சிட்டா, அடங்கல் பெற்று அளிக்க வேண்டும். அதன் பின்னர் அந்த விவரங்கள் சரியாக இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலம் பெற்றவர்கள், கோயில் நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், பட்டா மாறுதல் செய்யப்படாத நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவுகளில் உள்ள இடங்களில் சாகுபடி செய்பவர்கள், குத்தகைதாரர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் கிடைக்காது என்ற நிலை உள்ளது.
எனவே, இந்த புதிய நடைமுறையை கைவிட்டு, ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி, வேளாண் உதவி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், ஒரு ஏக்கர் சாகுபடி செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு அரசு ரூ.90 ஆயிரம் கடன் கொடுக்கிறது.
ஆனால், பயிர்கள் பாதிக்கப்பட்டால் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. இத்தொகை போதுமானதல்ல, கடன் வழங்கும் தொகைக்கு ஈடான வகையில் அதிகரித்து வழங்க வேண்டும் என்றார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் காவிரி டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியது: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க அரசு கொண்டு வந்துள்ள செயலி நடைமுறை, பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும் டெல்டா மாவட்டங்களில் சாத்தியமல்ல.
இந்த நடைமுறையில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட போதிய அலுவலர்கள் இல்லை. கடந்த குறுவை பருவத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை செயலி வாயிலாக கணக்கெடுத்ததில் பல விவசாயிகள் விடுபட்டு, இன்னமும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் அதே நடைமுறையில் கணக்கெடுப்பு நடத்துவது சரியல்ல. எனவே, தமிழக அரசு பழைய நடைமுறையை பின்பற்றி உரிய காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது: ஜிபிஆர்எஸ் தொழில்நுட்ப உதவியுடன் ‘கிராப் டேமேஜ் அசெஸ்மென்ட்’ செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்துவதுடன், நிலத்தின் உரிமையாளர் யார்? பரப்பளவு எவ்வளவு? குத்தகை நிலமா? கோயில் நிலமா? அதில் சாகுபடி செய்வது யார்? என கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் அடங்கல் சான்றின்படி இதில் பதிவேற்றம் செய்ய முடியும்.
மேலும், இதில் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, விரைவாக நிவாரணம் வழங்க முடியும். ஆனால், அதேநேரம், கூட்டுப்பட்டா நிலங்களில் சாகுபடி செய்வோர், பெயர் மாற்றம் செய்யப்படாத நிலங்களில் சாகுபடி செய்வோர் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய முடியாது. யார் பெயரில் பட்டா உள்ளதோ அவர்களுக்குத்தான் சென்று சேரும் என்றனர்.