கடலூர் மாவட்டத்திலேயே அதிக வருவாய் கிராமங்களை கொண்ட தொகுதியாக விளங்கிய விருத்தாசலம் 2011-ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது கெங்கைகொண்டான், பெண்ணாடம் பேரூராட்சிகள், கம்மாபுரம் மற்றும் நல்லூர் ஒன்றியங்கள் பாதியாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
இத்தொகுதியில் விருத்தாசலம் நகராட்சி, மங்கலம்பேட்டை பேரூராட்சி மட்டுமே உள்ளன. கார்குடல், பாலக்கொல்லை, ஆலடி, பெரியவடவாடி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட ஊராட்சி அமைப்புகள் உள்ளன.
மிகவும் பழமை வாய்ந்த பழமலை நாதர் ஆலயம், 5 கோபுரங்களைக் கொண்ட விருத்தகிரீஸ்வரர் கோயில், ஒரு அரசுக் கலைக் கல்லூரி, தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவை விருத்தாசலத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன. அரசு பள்ளிகளுக்கு இணையாக தற்போது தனியார் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன.
மாவட்டத்திலேயே அதிக ரயில் போக்குவரத்து தடங்கள் நிறைந்ததாக விருத்தாசலம் ஜங்ஷன் விளங்குகிறது. அதிகளவில் கிராமப்புறங்களை உள்ளடக்கிய விருத்தாசலம் தொகுதியில் இந்துக்கள் அதற்கடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகப்படியாக வசிக்கின்றனர்.
இத்தொகுதியில் 1951 முதல் காங்கிரஸ் 5 முறை, அதிமுக 3 முறை, திமுக, தேமுதிக தலா 2 முறை, பாமக, ஜனதா தளம் மற்றும் சுயேச்சை தலா ஒரு முறை வென்றுள்ளன. 2005-ம் ஆண்டு கட்சி தொடங்கி, விருத்தாசலத்தில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய தொகுதியாக விளங்குகிறது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு 2021-ல் நடைபெற்ற தேர்தலில் அவரது மனைவி பிரேமலதா போட்டியிட்டு 25,098 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்தார். 812 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து விருத்தாசலத்தில் போட்டியிடும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு இது 2-வது முறை. கடந்த முறை தனித்து போட்டியிட்டு 25,098 வாக்குகள் பெற்ற பிரேமலதா, கூட்டணி பலத்தில் களம் காண்கிறார்.
திமுக கூட்டணியில் பிரேமலதா, அதிமுக கூட்டணியில் மருத்துவர் தமிழரசி, தவெக சார்பில் விஜய், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்தி ஆகியோர் களத்தில் உள்ளனர். 4 முனைப் போட்டி என்று கூறப்பட்டாலும் இதில் தேமுதிக - பாமக இடையே நேரடி போட்டியாக வாக்காளர்கள் மத்தியில் கணிக்கப்படுகிறது.
திமுக நிர்வாகிகளின் வழிகாட்டுதலோடு தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பிரேமலதாவுக்கு, தொகுதியில் உள்ள கிராமம் முழுவதும் அத்துபடி. தேமுதிக நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைப்பதால், அவர்கள் புதுத்தெம்புடன் தொகுதிக்குள் வலம் வருகின்றனர்.
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்கப்படும், விஜயகாந்த் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன் என்ற கோரிக்கைகளோடு வலம் வரும் பிரேமலதாவுக்கு ஒரு சில கிராமங்களில் சாதி ரீதியாக எதிர்ப்பு தெரிவித்தாலும், கூட்டணிக் கட்சியான திமுக தயவோடு கிராமங்களுக்குள் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சாதி ரீதியாக வரும் எதிர்ப்பை தனக்கு சாதகமாக்கும் வகையில் பிற சாதியினரை தன்பக்கம் ஈர்த்து வருகிறார். இருப்பினும் தலைவர்களுடனான பிரச்சாரத்தின்போது இவர் பேசும் சொதப்பல் பேச்சுகள், பிரச்சாரத்தில் துணை செல்லும் திமுக நிர்வாகிகளை சங்கடத்திற்கு ஆளாக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர் உடன் பிறப்புகள்.
மறுபுறத்தில் நிர்வாகிகளுக்கு ஊக்க மருந்து அளிக்க வேண்டிய விஷயத்தில் திமுக பொறுப்பாளர்கள் பாரபட்சம் காட்டுவதாக திமுகவினரே போர்க்கொடி தூக்கும் நிலை நிலவுவதால், இது தேர்தல் நாளன்றும் எதிரொலிக்கும் என்கின்றனர் சிறுத்தைகள். எதிர் தரப்பில் உள்ள மருத்துவர் தமிழரசியோ, நான் உள்ளூரைச் சேர்ந்தவர்.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். என்னால் உங்களுக்கு உதவ முடியும். உபத்தரம் இருக்காது என்ற ரீதியில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த, அதிமுகவினர் பம்பரமாக சுழல்கின்றனர்.
ஏனோ பாஜகவினர் தான் சுணக்கத்திலேயே இருப்பதாகவும், அவர்களை பிரச்சாரத்தின்போது தவிர்ப்பது நல்லது என பாமகவினரே வெளிப்படையாக பேசுவதால், அவர்களும் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
பிரேமலதாவுக்கு என தனி செல்வாக்கும், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினரின் வாக்குகளோடு, திமுகவின் தேர்தல் அறிக்கையும் தனது பலமாக இருப்பதால் தங்களுக்கே வெற்றி என சூளுரைக்கின்றனர் தேமுதிகவினர்.
அதிமுக பலத்தோடு வலம் வரும் தமிழரசி, கடந்த தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் பாமக தோல்வியடைந்தது. எனவே இந்தமுறை கண்டிப்பாக தனக்கு வாய்ப்பு உறுதி என்ற நம்பிக்கையோடு வாக்கு சேகரிக்கிறார்.
பிரதானக் கட்சிகளின் வாக்குகளில் எவ்வளவு பிரிப்பார் விஜய் என கணக்குப் போடும் விருத்தாசலம் வாக்காளர்கள் ஏர் உழவன் சின்னத்தை காணவில்லையே என ஏக்கப்பெருமூச்சும் விடுகின்றனர். இந்தத் தொகுதியில் நீண்டகால பிரச்சினைகளுக்கு குறைவில்லை.
இதுவரை நடைபெற்ற 14 தேர்தல்களில் இத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படுவோர் பெரும்பாலும் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. விருத்தாசலத்தை மையப்படுத்தி மாவட்டத் தலைநகர் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதும் தொடர்கிறது.
தொகுதியில் உள்ள மணிமுத்தாறு வற்றிய நிலையிலும், கழிவுநீர் வாய்க்காலாகவும் மாறி வருகிறது. அரசு சார்பில் சிட்கோ உருவாக்கப்பட்டு அங்கு பீங்கான் உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை தற்போது முடங்கும் நிலையில் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்த வேண்டும் என்பது தொகுதி வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடலூரில் இருந்து 60 கி.மீ தொலையில் உள்ளதால் அரசு சார்ந்த திட்டங்கள் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் இருப்பதாகவும், சாலைவசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தொகுதி வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 1,18,319
பெண்கள் - 1,19,495
மூன்றாம் பாலினத்தவர் - 22
மொத்தம் - 2,37,836