சீர்காழி தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில்செல்வனுக்கு ஆதரவு திரட்டிய துர்கா ஸ்டாலின்.
நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை: இதுவரை அரசியல் களத்தில் எந்த வேட்பாளருக்கும் நேரில் சென்று வாக்கு சேகரிக்காத முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சீர்காழி தொகுதியில் மக்கள் சந்திப்பு நடத்தி அங்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவு திரட்டினார்.
இது திமுக உள்ளிட்ட கட்சிகளின் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. துர்கா ஸ்டாலின் இப்படி நேரடியாக களம் இறங்கியுள்ளதற்கு பின்னணியில் சீர்காழி தொகுதி குறித்த ஒரு நம்பிக்கை இருக்கிறது என்கிறார்கள்.
இந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நீண்ட நெடிய சென்டிமென்ட் உண்டு. இதனால், இந்தத் தொகுதியை ஒரு தீர்க்கதரிசி தொகுதி என்றும் கூறுவது உண்டு. இதனிடையே, இந்த முறை இந்தத் தொகுதியில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், புதிய சின்னத்தை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வைத்தார்கள்.
எனவே, இந்தத் தொகுதியில் உதயசூரியனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து ஸ்டாலினும், துர்கா ஸ்டாலினும் தீவிரமாக செயல்படுவதாக சொல்கிறார்கள். வேட்பாளர்களை ஆதரித்து நாகையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், அதை மாற்றி சீர்காழியில் பிரச்சார பொதுக் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின்.
இதற்காக சீர்காழிக்கு வந்திருந்தவர் அன்று காலையிலேயே திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபயணம் சென்று தொகுதி மக்களை சந்தித்து திமுகவுக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அன்று மாலை அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ‘இந்த ஊர் மருமகனாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்’ என பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக, தனது சொந்த ஊரான திருவெண்காடு சீர்காழி தொகுதியில் வருவதால், துர்கா ஸ்டாலினும் தனது பங்குக்கு நேரடியாக மக்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி, துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். சீர்காழியில் வெற்றி பெற்றால் தான் திமுக ஆட்சி அமையும் என்ற சென்டிமென்டை அவர் நம்புவதுதான் இந்தளவுக்கு தீவிரமாக அவர் களமிறங்கியதற்கு காரணம் என்கிறார்கள். சீர்காழி சென்டிமென்ட் இந்தமுறையும் பலிக்குமா? என்று கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம்.