திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதான தொழில்களாக கொண்ட நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் காங்கிரஸ், அமமுக, தவெக வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
சமுதாய வாக்குகள் அங்குமிங்குமாக சிதறும் வாய்ப்புள்ளதால் இத்தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மறுசீரமைப்புக்குப்பின் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டதால் தொகுதி தற்போது பரந்து விரிந்து காணப்படுகிறது. பாளையங் கோட்டை தாலுகா, நாங்குநேரி தாலுகாவில் நாங்குநேரி, இட்டமொழி, எர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு, கருவேலங்குளம் போன்றவை தொகுதியின் முக்கிய பகுதிகள்.
இத்தொகுதியில் நாடார், ஆதிதிராவிடர், முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும் யாதவர், இஸ்லாமியர் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினர் பரவலாகவும் உள்ளனர்.
வரிசைகட்டும் கோரிக்கைகள்
1971 முதல் 2021 வரை (2019 இடைத் தேர்தல் உட்பட) நடைபெற்ற 13 தேர்தல்களில் அதிமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, திமுக 2 முறை, இந்திய கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி, ஜனதா கட்சிகள் தலா 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 2001-ல் அதிமுக வேட்பாளர் நடேசன் பால்ராஜ் வெற்றிபெற்று அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக முடங்கியிருக்கும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை மேம்படுத்த இத் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. நாங்குநேரி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவேண்டும்.
நாங்குநேரி பெரியகுளத்திலிருந்து 46 குளங்களுக்கு தனி கால்வாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விஜயநாராயணம், நாங்குநேரி, திருக்குறுங்குடி பெரியகுளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட குளங்களை தூர்வார வேண்டும். களக்காடு நகராட்சிக்கு தாமிரபரணிகூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
களக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள வாழைத்தார் ஏல மையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என்றெல்லாம் இத்தொகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் வரிசைகட்டி இருக்கின்றன.
தற்போதைய தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், அமமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, வி.கே. சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சி வேட்பாளர்களிடையேதான் போட்டியிருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ ரூபி மனோகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அமமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆர். இசக்கிமுத்துவும், தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ச.செல்வம், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதிக்கு மிகவும் அறிமுகமான ரூபிமனோகரன் கூட்டணி பலம், சிறுபான்மையினர் வாக்குகள் கைகொடுக்கும் என்று நம்புகிறார். நாங்குநேரிக்கு வரவேண்டிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட வள்ளியூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து மாற்று வேட்பாளர்கள் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்வது இவருக்கு பின்னடைவு.
மேலும் கடந்த 2021 தேர்தலின்போது ஆளுங்கட்சி தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாதது பெரும் குறையாகவே இருக்கிறது. மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரே ரூபிமனோகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதும் சலசலப்பை அதிகரித்திருக்கிறது.
அமமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்னரே டிடிவி தினகரனை நாங்கு நேரிக்கு அழைத்துவந்து ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை இசக்கி முத்து நடத்தியிருந்தார். தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் நாங்குநேரிக்கு டிடிவி தினகரன் மீண்டும் வந்து இசக்கி முத்துவுக்கு வாக்கு சேகரித்துள்ளார்.
இத்தொகுதியில் உள்ள அதிமுக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்று அமமுக நம்பிக்கையுடன் உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் தவெகவில் சேர்ந்த ஓரிரு நாளிலேயே அக்கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றவர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன்.
இவர் கடந்த 2019-ல் இத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 33,445 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
மண்ணின் மைந்தர், அய்யாவழி நாடார் சமூகத்தை சேர்ந்தவர், தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் என்றெல்லாம் பல்வேறு அம்சங்கள் இவருக்கு சாதகமாக உள்ளன. மேலும் அதிமுக, திமுக, காங்கிரஸ் அதிருப்திவாக்குகளை அறுவடை செய்யவும் இவருக்கு வாய்ப்புள்ளது. தவெகவின் வாக்குகளும் இவருக்கு பலம் சேர்க்கும்.
வாக்குகள் சிதற வாய்ப்பு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வம், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். தற்போதைய சூழலில் காங்கிரஸ், அமமுக, தவெக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டியுள்ளது. ஆனால் பல்வேறு வகைகளில் வாக்குகள் சிதறும் நிலையும் காணப்படுகிறது. அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் முன்னாள் காவல் துறை அதிகாரி வெள்ளைத்துரை, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
இவர் அச்சமுதாய வாக்குகளை பிரிப்பார் என்பதால் அதே சமுதாயத்தை சேர்ந்த அமமுக வேட்பாளருக்கு பாதகமாக இருக்கும். இதுபோல் காங்கிரஸ், தவெக வேட்பாளர்கள் இருவரும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளும் சிதறும் வாய்ப்புள்ளது.
இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், யாதவர்கள் போன்ற மற்ற சமுதாயத்தினரின் வாக்குகளை பெறுவதில் முக்கிய வேட்பாளர்களின் கவனம் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக இப்பகுதிகளில் நடைபெற்ற சாதிய மோதல்கள், கொலை சம்பவங்கள், முக்கிய கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் என்று வேறுபல அம்சங்களும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 1,26,452
பெண்கள் - 1,30,712
இதரர் - 13
மொத்த வாக்காளர்கள் - 2,57,177