தமிழகம்

தளி தொகுதியில் வெற்றி கிரீடம் யாருக்கு?

கி.ஜெயகாந்தன்

தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகள் வரிசை பட்டியலில் 56-வது இடத்தில் தளி சட்டப்பேரவை தொகுதி உள்ளது. ‘லிட்டில் இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் இத்தொகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் 60 சதவீதம் வனம் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்துக்குள் இத்தொகுதியில் உள்ள வனக் கிராமமான பிலுகுண்டுலு வழியாக நுழையும் சிறப்பு பெற்றுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டுக்கு முன்னர் உத்தனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்தது. 1977-ல் உத்தனப்பள்ளி தொகுதி நீக்கப்பட்டு, புதிதாக இத்தொகுதி உருவானது. இயற்கை வளங்கள் நிறைந்த இத்தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது என 4 மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர்.

குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். மேலும், நாகரிக காலத்தில் பழமை மாறாமல் பாரம்பரியமாக வாழும் இருளர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இத்தொகுதி தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளன.

இத்தொகுதியைப் பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற 11 தேர்தல்களில் தேசிய கட்சிகள் அதிக முறை வெற்றி பெற்றுள்ளன. இதில், காங்கிரஸ் 4 முறையும், ஜனதா, பாஜக, திமுக, சுயேச்சை தலா ஒரு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ராமச்சந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் நரசிம்மன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுரேஷ் மற்றும் சுயேச்சைகள் உட்பட 10 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

மலைக் கிராமங்கள் அதிகமாக உள்ள இத்தொகுதி கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருப்பதால், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இம்மக்களுக்கு சென்று சேராத நிலையுள்ளது.

குறிப்பாக குழந்தைகள் கல்வி இடை நிறுத்தம், மக்களின் வறுமை மற்றும் அறியாமை காரணமாக இளம் வயது திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளதால், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளால் பயிர்ச் சேதம் மற்றும் மனித உயிர்ச் சேதம் ஏற்படுகிறது.

இதை தடுக்க வனப்பகுதியை ஒட்டி சூரிய சக்தி வேலிகள், தடுப்புகள் அமைக்க வேண்டும். வனத்துறையில் கூடுதல் ஊழியர்களை நியமித்து வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். அஞ்செட்டி அருகே தொட்டல்லா பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பன விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மலைக் கிராம மாணவர்கள் மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வியைத் தொடர அரசு மேல்நிலை பள்ளிகள், அரசு கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்பது இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. மலைக் கிராமங்களில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்பது பழங்குடியின மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

வேட்பாளர்களின் பின்புலம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் 3 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் தொகுதி மக்களிடம் நன்கு பரிச்சயமானவர் கட்சியில் மாவட்டச் செயலாளராக உள்ளார். பண பலம், மலைவாழ் மக்களிடம் உள்ள செல்வாக்கு இவருக்கு பலமாக கருதப்படுகிறது. இவர் மீதான வழக்குகளைக் கூறி பிற வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதானப்படுத்துவது இவருக்கு பலகீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதிக்கு இதுவரை தான் செய்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், குறிப்பாக யானைகளால் மனித உயிர்ச் சேதம் மற்றும் பயிர்ச் சேதங்களின்போது, விவசாயிகளுடன் இணைந்து போராடியது உள்ளிட்ட பணிகள் குறித்தும், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதாகக் கூறி பிரச்சாரத்தில் முன்னேறி வருகிறார்.

பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். தொகுதி மக்களிடம் பரிச்சயமானவர். கட்சியில் மருத்துவர் அணியில் பதவி வகித்துள்ளார். தற்போது மேற்கு மாவட்ட துணை தலைவராக உள்ளார்.

இம்முறை இவரது வெற்றியை உறுதி செய்ய அக்கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம் செய்திருப்பது இவருக்கு பலம் சேர்த்துள்ளது. மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நரசிம்மன், வனம், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழலை காப்பது, தற்சார்பு பொருளாதாரம் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை பட்டியலிட்டு மக்களிடம் தனது வெற்றிகாக களமாடி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சுரேஷ், புதியவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்றும் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை பட்டியலிட்டும் தேர்தல் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இத்தொகுதியை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைக்குமா அல்லது தாமரை மலருமா என்பது தேர்தல் முடிவே தெளிவுபடுத்தும்.

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள் - 1,20,000

பெண்கள் - 1,15,947

3-ம் பாலினத்தவர் - 37

மொத்த வாக்காளர்கள் - 2,35,984

SCROLL FOR NEXT