திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியானது தமிழகத்தின் 102-வது தொகுதியாகும். சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில், வெள்ளகோவில் வீரக்குமார சுவாமி கோயில், மாந்தபுரம் நாட்ராயசுவாமி கோயில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
காங்கயம், வெள்ளகோவில் ஆகிய 2 நகராட்சிகள், முத்தூர், சென்னிமலை ஆகிய 2 பேரூராட்சிகள், காங்கயம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியங்கள், தாராபுரம் வட்டத்தில் குண்டடம், பெருந்துறை வட்டத்தில் சென்னிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களையும் இந்தத் தொகுதி உள்ளடக்கியுள்ளது. கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிகளவிலும், அடுத்தபடியாக முதலியார், ஆதிதிராவிடர் உள்ளிட்ட சமூகத்தினரும் வாக்காளர்களாக உள்ளனர்.
ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி
இந்தத் தொகுதியானது கடந்த 1957-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின்போது வெள்ளகோவில் தொகுதியின் 80 % பகுதிகள் காங்கயம் தொகுதியில் சேர்க்கப்பட்டது. இந்தத் தொகுதி 16 முறை தேர்தலை சந்தித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக அதிமுக 8 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக 3 முறையும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்கு இளைஞர் பேரவை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், அவர் பர்கூர் தொகுதியிலும் வெற்றி பெற்றதால் இந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.எம்.வீரப்பன் வெற்றி பெற்றார்.
முக்கியத் தொழில்கள்
காங்கயம் தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகவும், தேங்காய் எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள், தேங்காய் கரித்தொட்டி ஆலைகள், தேங்காய் பருப்புஉற்பத்தி, வெள்ளகோவில் பகுதியில்நூற்பாலைகள்,நிதி நிறுவனங்கள், விசைத்தறிக்கூடங்கள் அதிகளவில் உள்ளன.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
தொகுதியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை நீடித்து வருகிறது. வெள்ளகோவிலை வட்டமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் 5 ஆண்டுகளாக தொடர்ந்துநீடித்து வருகிறது. பிஏபி தண்ணீர் கடைமடைப் பகுதியான வெள்ள கோவில் வரை சென்றடையாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடு, கோழி, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளுக்கு போதிய அளவு இழப்பீடு வழங்கு வதில்லை என்ற குற்றச்சாட்டையும் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
கடந்த தேர்தல் முடிவு
காங்கயம் தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 94,197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.எஸ்.ராமலிங்கம் 86,866 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கே.சிவானந்தம் 11,307 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 1,027 வாக்குகள் பதிவாகியிருந்தன.
தற்போதைய தேர்தலில் திமுக சார்பில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் எம்.கார்மேகம், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பி.மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நான்கு வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் உடைய திமுக-அதிமுக வேட்பாளர்களுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. அமைச்சருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களும், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,03,784
பெண் - 1,12,849
3-ம் பாலினத்தவர் - 13
மொத்த வாக்காளர்கள் - 2,16,646