என்.பாண்டி, கே.ரவி மனோகரன்
பழநி தொகுதியை 4-வது முறையாக கைப்பற்றுவதற்கு அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பழநி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1977 முதல் நடைபெற்ற தேர்தலில் திமுக 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதிமுக தலா 3 முறையும், காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 1991 முதல் 2021 வரை திமுக, அதிமுக மாறி மாறி இத்தொகுதியை கைப்பற்றின.
தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் எம்எல்ஏ.வாக (திமுக) உள்ளார். இம்முறையும் பழநி தொகுதி யிலேயே போட்டியிட திட்டமிட்டு களப் பணியாற்றினார்.
ஆனால், திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை எதிர்த்து போட்டியிட கட்சி மேலிடம் அவருக்கு அழுத்தம் கொடுத்தது. அவரோ, பழநியில் போட்டியிட்டு ‘ஹாட்ரிக்’ வெற்றிபெற விரும்பினார். இந்நிலையில் 2026 தேர்தலில் திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளராக செந்தில்குமார் அறிவிக்கப்பட்டார்.
அதேசமயம், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பழநி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
4-வது வெற்றி யாருக்கு?
அதிமுக கூட்டணியில் பழநி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். ஆனால், அதிமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த கே.ரவி மனோகரனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவினர் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பழநி ஒதுக்கப்பட்டுள்ளதால், தலா 3 முறை வெற்றி பெற்றுள்ள அதிமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் திண்டுக்கல்லை சேர்ந்தவருமான பாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2014-ல் திண்டுக்கல் மக்களவை தொகுதியிலும், 2021-ல் திண்டுக்கல் சட்டப்பேரவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு பழநி தொகுதியை கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கியுள்ளது.
2016, 2021-ல் தவறவிட்ட பழநி தொகுதியை இம்முறை தக்கவைக்க அதிமுகவினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4-வது முறையாக பழநியில் வெற்றிபெறப் போவது அதிமுகவா?, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.