அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம்
சென்னை: மின்துறை நிலவரம் குறித்து 2 நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘‘தமிழகத்திலேயே மின்வெட்டில் நம்பர் 1 தொகுதி முதல்வரின் பெரம்பூர் தொகுதிதான். பனையூரில் உள்ள ஆளுங்கட்சி அலுவலகத்திலும் மின்வெட்டு. விசிக தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்திப்பின்போதும் மின்வெட்டு. மின்வெட்டு தொடராமல் இருக்க, என்ன செய்யப் போகிறீர்கள்?’’’ என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, ‘‘மின்துறையில் ரூ.2.5 லட்சம் கோடி கடன் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்பாடு செய்யப்படவில்லை. மின்துறை நிலவரம் குறித்து 2 நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டும். மின் வெட்டுகளை சரி செய்ய 125 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (திமுக) பேசும்போது, ‘‘கடந்த 5 ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்துக்காக 393 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், கூடுதல் மின் தேவைக்கேற்ப மின்னுற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 90 ஆயிரம் மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. இப்போது உள்ள பணியாளர்களை வைத்துதான் கடந்த 5 ஆண்டுகளில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டது’’ என்றார்.