தமிழகம்

வேளச்சேரியா... விருகம்பாக்கமா... பெரம்பூரா? - விஜய் களமிறங்கும் தொகுதிக்கு எகிறும் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பதை அறிந்து கொள்வதில் தமிழக மக்களைவிட அரசியல் கட்சி தலைவர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

தவெக-வின் முதல் மாநாட்டை கூட்டிய விக்கிரவாண்டி, சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் இருக்கும் திருச்சி கிழக்கு, அல்லது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதி என்று ஆளாளுக்கு ஒரு தொகுதியை விஜய்காக இத்தனை நாளும் விளம்பரப்படுத்தி வந்த நிலையில், தற்போது சென்னையில் இருக்கும் விருகம்பாக்கம், வேளச்சேரி, பெரம்பூர் ஆகிய 3 தொகுதிகளில் ஒன்றில் விஜய் களமிறங்கலாம் என லேட்டஸ்ட் அப்டேட் தருகிறது தவெக வட்டாரம்.

          

இதுகுறித்து நம்மிடம் பேசிய தவெக நிர்வாகிகள் சிலர், “விஜய்யின் ராசி மற்றும் பெயரின் முதல் எழுத்தான 'வி' சென்டிமென்ட் படி, விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரி தொகுதியில் நின்றால் வெற்றி பிரகாசமாக இருக்கும் என வழக்கமாக விஜய்க்கு ஜோதிடம் கணித்துச் சொல்லும் ஆன்மிகப் பெரியவர் சொல்லி இருக்கிறார். அதன்படி அந்தத் தொகுதிகளில் முதல்கட்ட வேலைகள் சத்தமில்லாமல் நடந்தன.

இதனிடையே, ஆதவ் அர்ஜுனா தனது ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் மூலம் பெரம்பூர் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாகச் சொல்லி ஒரு சர்வே நடத்தினார். இந்தத் தொகுதியில் பட்டியலின மற்றும் வன்னியர் சமூகத்தினர் சரிபாதியாக வசிக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வாக்குகள் இங்கே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால் பெரம்பூரில், தான் போட்டியிடுவதை விட விஜய் போட்டியிட்டால் களம் சரியாக இருக்கும் என கணித்துச் சொல்லி இருக்கிறார் ஆதவ்.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், கடந்த 2021 தேர்தலிலேயே அதிமுக பெரம்பூர் தொகுதியில் டல்லடித்துவிட்டது. அதனால் அந்தத் தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலனுக்குத் தொகுதியைத் தள்ளிவிட்டு ஒதுங்கிக்கொண்டது அதிமுக தலைமை. தற்போதும் அதிமுக-வுக்கு அங்கே வலுவான முகம் யாரும் இல்லை. திமுக-வில் மீண்டும் ஆர்.டி.சேகர் தான் முயற்சிக்கிறார். ஆனால், அவர் மீது ஏகப்பட்ட அதிருப்தி அலை வீசுகிறது.

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு விவகாரம், மூலக்கடை, கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி என மழைக் காலங்களில் தீராத அவதியாகத் தொடரும் வெள்ளநீர் தேக்கம் மற்றும் குண்டும் குழியுமான சாலைகள் தான் மக்களின் கொந்தளிப்புக்கு முக்கியக் காரணம். இந்தத் தொகுதியில் உள்ள மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் ஆதரவு வாக்குகளும் தவெக-வுக்குச் சாதகமாகத் திரும்பும். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான், பெரம்பூரில் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி, 'விஜய் பெரம்பூரில் தான் போட்டியிட வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்" என்றனர்.

விருகம்பாக்கம் மற்றும் வேளச்சேரியில் விஜய் களமிறங்க யோசிப்பதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள். வன்னியர்கள், பட்டியலினத்தவர்கள், பிராமணர்கள் என கலவையான வாக்கு வங்கியைக் கொண்ட தொகுதியாக இருக்கிறது வேளச்சேரி.

சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏ-வான அசன் மௌலானா மீது அதிருப்தி அலை வீசுவதால் திமுக-வின் சென்னை துணை மேயர் மகேஷ்குமார், அதிமுக-வின் தென்சென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோக், பாஜக-வின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் எனப் பெரும் பட்டாளமே வேளச்சேரிக்காக வரிந்து கட்டுகிறது.

அதேபோல், தென்மாவட்ட மக்களின் ஆதிக்கம் நிறைந்த விருகம்பாக்கத்தில் நாடார், தேவர், பட்டியலினத்தவரின் வாக்குகள் அதிகம். அங்கே திமுக-வின் பிரபாகர் ராஜா, கே.கே.நகர் சரவணன் மற்றும் அதிமுக-வின் முன்னாள் எம்எல்ஏ-வான விருகை ரவி ஆகியோர் முட்டி மோதுகிறார்கள்.

இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றைக் கைப்பற்ற தமிழிசையும் டெல்லி லாபி மூலம் தீவிரமாக முயற்சிக்கிறார்.

ஒருவேளை இந்தத் தொகுதிகள் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டால் பாஜக விஜய்க்கு தேவையற்ற குடைச்சலைக் கொடுக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டே பெரம்பூரை அவருக்கு பெஸ்ட் சாய்ஸ் என்கிறார்களாம்.

SCROLL FOR NEXT