

அப்பாவு
“திமுக-வுடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா சேராதா என்ற கவலை டிடிவி. தினகரனுக்கு எதற்கு ஏற்பட்டுள்ளது?’ என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக நேற்று திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குகளை தூசு தட்ட வேண்டும் என்றால் சகாரா டைரி குறிப்புகளில் உள்ளவர்களின் வழக்குகளையும் தூசு தட்ட வேண்டும். கடந்த 2011 - 2012-ம் ஆண்டு காலகட்டத்தில் சகாரா வழக்கில் சம்பந்தப்பட்ட தற்போதைய பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது ரூ. 25 கோடியை 4 தவணைகளாக சகாரா நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நிலையில் தான் தற்போதைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிலும் உள்ளது. அமலாக்கத்துறை ஊழல் பிரச்சினையை தூசு தட்டி எடுத்து பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி சப்ளை செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் உள்ளது. இதன் மூலம் ரூ.826 கோடி தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை பிரதமரின் நண்பர் அதானி மீது வழக்குத் தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, அதானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சகாரா ஊழல் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களில் நடந்த முறைகேடுகளை உறுதி செய்து அது தொடர்பாக வழக்குத் தொடர ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதில் ஒரு கோப்பில் கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை. ஒரு வழக்கு தொடர்பாகக் கூட விசாரிக்க அனுமதி வழங்கவில்லை.
திமுக-வுடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா சேராதா என்ற கவலை டிடிவி.தினகரனுக்கு எதற்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். டிடிவி.தினகரன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. திமுக பூஜ்ஜியம், அதிமுக ராஜ்யத்தை பிடிக்கும் என பழனிசாமி கூறியது அவரின் ஆசையாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.