கோப்புப் படம்

 
தமிழகம்

வருவாய் கிராம உதவியாளர்கள் தேர்வு முடிவு எப்போது? - 3 மாதங்களாக காத்திருப்பு

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வருவாய் கிராம உதவியாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு 3 மாதங்களான நிலையில் தேர்வு முடிவுவெளியிடப்படுவது எப்போது? என தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள வருவாய் கிராம உதவியாளர் (தலையாரி) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் வட்டத்துக்கு 13, கும்பகோணம் 65, திருவையாறு 18, திருவிடைமருதூர் 33, பூதலூர் 19, பட்டுக்கோட்டை 28, ஒரத்தநாடு 34, பேராவூரணி 20, பாபநாசம் 55, திருவோணம் 20 பேர் என மொத்தம் 305 வருவாய் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2025-ம் ஆண்டு ஆக.1 முதல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

          

பின்னர், அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்ற போதிலும், பட்டதாரிகள், பொறியாளர்கள் என உயர்கல்வி படித்த பலரும் அரசுப் பணி என்பதாலும், குறைந்த ஊதியம் என்றாலும், 10 ஆண்டுகள் கிராம உதவியாளராக பணியாற்றியவர்கள், கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு பெறலாம் என்ற ஆசையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த காலிப் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.

இதையடுத்து, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கடந்த ஆண்டு நவ.17 -ம் தேதி நடைபெற்றது. ஆனால், தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை காரணம் காட்டி தேர்வானோர் பட்டியல் வெளியிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்த இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், நேர்காணல் முடிந்து3 மாதங்களை கடந்த நிலையிலும், இதுவரை கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது.

எனவே, அரசுப் பணி கனவில் தேர்வு எழுதி காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் கனவுகளை நனவாக்கும் வகையில், உடனடியாக தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என தேர்வு எழுதியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேர்வு எழுதியவர்கள் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 305 வருவாய் கிராம உதவியாளர் பணிக்கு பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இதில் அதிகமாக பட்டப்படிப்பு படித்தவர்களும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். இதில், தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் ஆணையம் வெளியிட்டால், தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியிடப்படுவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.

எனவே, தஞ்சாவூர் ஆட்சியர், தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி, கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யும் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் அரசின் ஒப்புதல் பெற்று தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT