தமிழகம்

தெருநாய் பிரச்சினை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கெடு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தெருநாய் பிரச்சினையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு இறுதிக் கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெருநாய்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்பட்டு, நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, கண்காணிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த முறையும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது எனத் தெரிவித்தனர்.

பின்னர், அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு இரண்டு வாரங்கள் இறுதிக் கெடு வழங்கிய நீதிபதிகள், மேற்கொண்டு எந்த அவகாசமும் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT