சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, இந்துசமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தவெக உறுப்பினர் சி.தமிழ்ச்செல்வி பேசிய பிறகு தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதல்வர் தெரிவித்த கருத்து ஊடகங்களில் தவறான கண்ணோட்டத் துடன் பரப்பப்பட்டுள்ளன.
மசோதா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான கருத்துகளில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.
தற்போதைய 543 தொகுதி எண்ணிக்கையுடன் கூடிய தொகுதி மறுவரையறைதான் தேவை. இதுதொடர்பாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: கடந்த 12-ம் தேதி சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது இருக்கும் 543 தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே இருக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வரின் உரையில் 543 தொகுதிகள் அப்படியே இருக்க வேண்டும் என்று எங்கும் குறிப்பிடவில்லை.
சட்டத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல் குமார்: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நமது கருத்தை வலியுறுத்தினோம். ஆனால், ஊடகங்களில் மசோதா தொடர்பான முதல்வரின் கருத்து வேறு கோணத்தில் திசை திருப்பப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா: இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி உள்பட கட்சியினரின் நிலைப்பாடு எதுவோ அதுதான் எங்கள் நிலைப்பாடும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி: புதிய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை வந்தால் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
அதனால்தான் மத்திய அரசு அனைத்து கட்சியினரும் கலந்து ஆலோசித்து வருகிறது. அதன்படி 1971 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
ஆதவ் அர்ஜுனா: இந்திரா காந்தியும் சரி, வாஜ்பாயும் சரி ஒரு சட்டம் கொண்டுவந்து தொகுதி மறுவரையறை காலத்தை 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தனர். அதைத்தான் தமிழக அரசும் வலியுறுத்துகிறது..
உதயநிதி ஸ்டாலின்: எங்களைப் பொருத்தவரை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்பது தொடர வேண்டும்.
அதில் ஏதேனும் மாற்றம் வந்ததால் தமிழகத்தின் 7.18 சதவீத பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. அது அதிகரிக்கலாமே தவிர குறையக்கூடாது.
பழனிசாமி: தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதம் இருக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு
ஆதவ் அர்ஜுனா: தொகுதிமறுவரையறை மசோதா பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாடு மாறுவதுபோல் இருக்கிறது. மத்திய அரசு 50 சதவீதம் அதிகரித்து மசோதாவைக் கொண்டு வந்தால் அதையும் எதிர்க்க வேண்டும்.
50 சதவீதம் அதிரித்தால் நம்மைப்போல் வடமாநிலங்களிலும் தொகுதி எண்ணிக்கை 50 சதவீதம் உயரும். எனவே, தொகுதிகள் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்லி மசோதாவை கொண்டு வந்தாலும் தமிழகத்தின் 39 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
நீட், ஜிஎஸ்டி என மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்கள் அனைத்தும் தென்மாநிலங்களுக்கு எதிராக குறிப்பாக தமிழகத்துக்கு எதிரான சட்டங்கள்தான்.
மத்திய அரசு ஒரு சலுகை அளிக்க முன்வருகிறது என்றால் அதற்குள் ஒரு தேர்தல் அரசியல் இருக்கும். மாநிலக் கொள்கை என்று வரும்போது நாம் அனைவரும் இணைந்துதான் ஆக வேண்டும்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு: மசோதா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து நாங்கள் விலகவில்லை.
ஆனால் ஒருவேளை மாற்றம் வருகிறது என்றால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்துக்கு குறையக்கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. இவ்வாறு விவாதம் நடை பெற்றது.