

நீர்மட்டம் 85.17 அடியாக இருந்த நிலையில் கடல் போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை.
மேட்டூர்: காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை 92 ஆண்டுகளை நிறைவு செய்து, 93-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.
கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகம் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. கர்நாடகாவில் குறைந்த அளவு பகுதியில் ஓடும் காவிரி ஆறு, தமிழகத்தின் வழியாக 700 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்கிறது. பருவமழை வரும்போது நீர்த்தேக்கத்துக்கு வழியில்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
எனவே, பருவமழைக் காலங்களில் காவிரி நீரைத் தேக்கி வைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்தும் நோக்கில், அப்போதைய ஆங்கிலேய அரசு 1925-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டுமானப் பணியைத் தொடங்கியது. வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறியாளரான கர்னல் எல்லீஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு 1934 ஜூலை 14-ம் தேதி கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.
இவ்வாறு ரூ.4.80 கோடி செலவில் கட்டப்பட்ட அணையை, 1934 ஆக.21-ம் தேதி அப் போதைய சென்னை கவர்னர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. நீர்த்தேக்கப் பகுதி 59.25 சதுர மைலும், மொத்த கொள்ளளவு 93.5 டிஎம்சியும் ஆகும். அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 120 அடி.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு பயன்படுகிறது. அணையில் உபரி நீரை வெளியேற்ற 16 கண் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தலா 20 அடி உயரமும், 60 அடிஅகலமும் கொண்டவை.
இதற்கு அணை கட்டிய கண்காணிப்புப் பொறியாளரான ‘கர்னல் எல்லீஸ்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட 1934 முதல் ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு 20 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 11 முறையும், காலதாமதமாக 62 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன. பல சிறப்புகள் வாய்ந்த மேட்டூர் அணை தனது 93-வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தது.
நீர்வரத்து சரிவு: இதனிடையே அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 10,579 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 10,414 கனஅடியானது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் 85.17 அடியாகவும், நீர் இருப்பு 47.30 டிஎம்சியாகவும் உள்ளது.