திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் பாஜக போட்டியிடும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஏற்கெனவே, அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை மாநிலங்களவை உறுப்பினர் ஆகிவிட்டதால் தொகுதியை பாஜகவுக்கு விட்டுத்தருவதில் அதிமுக தலைமைக்கு தலைவலி இருக்கவில்லை.
மேலும், இத் தொகுதியில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதால் பாஜக வற்புறுத்தி தொகுதியை கேட்டுப்பெற்றுள்ளதாக தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடலோர கிராமங்கள் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் வள்ளியூர், திசையன்விளை, கூடங்குளம், பணகுடி, ராதாபுரம், காவல்கிணறு போன்ற முக்கிய இடங்களை உள்ளடக்கி இத்தொகுதி அமைந்துள்ளது.
சிறுபான்மையினர் அதிகமுள்ள இத்தொகுதியை பாஜக கேட்டுப் பெறுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடந்த 2006 தேர்தலில் இத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவு கேட்டு அத்வானி பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.
அப்போது, தமிழிசைக்கு 7 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருந்தன. இதுபோல், கடந்த 2011, 2016 தேர்தல்களிலும் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியிருந்த இன்பதுரை குறைந்த வாக்கு வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் அப்பாவுவிடம் தோல்வியை சந்தித்திருந்தார். இதனால், இத்தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு இருக்கும் செல்வாக்கை கருத்தில் கொண்டுதான் பாஜக இம்முறை இங்கு போட்டியிடுகிறது.
மேலும், இத்தொகுதியில் உள்ள கணிசமான சிறுபான்மையினர் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் பட்சத்தில் அது திமுக கூட்டணிக்கு பாதகமாகவும், தங்களுக்கு சாதகமாகவும் இருக்கும் என்றும் பாஜக கணித்திருக்கிறது.
அத்துடன் அய்யாவழியை பின்பற்றுவோர் இந்த தொகுதியில் கணிசமாக உள்ளனர். அவர்களது ஆதரவும் தங்களுக்கு கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது.
இந்நிலையில், இத்தொகுதியில் பாஜக சார்பில் மாவட்ட துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான பாலகிருஷ்ணன் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்காகவே, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ராதாபுரத்தை கேட்டு வாங்கியிருப் பதாகவும் கட்சி வட்டாரங்கள் கலகலக்கின்றன.