விசிக தலைவர் திருமாவளவன்
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, இந்தத் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. யாரும் எதிர்பாராத திருப்பமாக கட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகிறார். அதேசமயம், சிட்டிங் எம்எல்ஏ-க்களான ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தற்போது எம்பி-யாக இருக்கும் திருமாவளவன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதும் சிட்டிங் எம்எல்ஏ-க்களில் மூன்று பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காததும் விசிக-வினர் இடையே இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏ-க்கள் மூவரும் திமுக சைடில் அதிகம் சாய்ந்து விட்டதாலேயே அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
“களத்தில் நான்கு முனை போட்டி இருப்பதால் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி ஒருவேளை அமைந்து திமுக கூட்டணி ஆட்சி அமைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் அமைச்சரவையில் தனக்கான இடத்தை ரிசர்வ் செய்வதற்காகவே திருமா சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்” என்றும் சிலர் சொல்கிறார்கள்.
இது குறித்து விசிக நிர்வாகிகளிடம் விசாரித்த போது, “கட்சி தொடங்கியது முதல் 25 ஆண்டுகளாக பலர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் வாய்ப்பு ஏதுவும் கிடைக்காமல் உள்ளனர். அதிமுக-வும் திமுக-வும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட நபர்களுக்கே சீட் வழங்குகிறார்கள். ஆனால் விசிக, அனைவருக்கும் அதிகாரம், அதிகார பரவலாக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் கட்சி. அதனால் ஒரே நபருக்கு மீண்டும், மீண்டும் சீட் வழங்குவது சரியானதாக இருக்காது.
இதன் காரணமாகவே, மூவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், திருமாவளவனே நேரடியாகப் போட்டியிடுவது என்பது மற்ற தொகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தொண்டர்களுக்கும் மேலும் உற்சாகம் அளிக்கும். இதைத் தவிர வேறெந்த உள்நோக்கமும் இல்லை” என்றனர்.