தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மோதிரங்களுடன் பெற்றோர். | படம்: நா.தங்கரத்தினம் |
மதுரை: மருத்துவ கட்டமைப்பு களையும், மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக் காமல் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால், அன்றாட மகப்பேறு சிகிச்சையில் பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுகளை மேம் படுத்தாமலேயே, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங் கப்பட்டுள்ளதால் தற்போது உள்ள மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவர்கள், பணி யாளர்களை கொண்டு திட்டத்தை செயல் படுத்துவதோடு மகப்பேறு சிகிச்சையை உரிய முறையில் மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவத் துறையை சேர்ந்த சில உயர் அதிகாரிகள் கூறியதாவது: தனியார் மருத்துவமனையில் ஒரு குடும்பம் பிரசவத்துக்கு ரூ.69,914 செலவிடுகிறது.
இந்த செலவினத்தை குறைத்து, இலவசமாக அரசு மருத்துவ மனைகளில் பிரசவங்கள் மேற்கொள்வதற்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்துவதாக சுகாதாரத் துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
ஆனால், ஏற்கெனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்கவும், மகப்பேறு கட்டமைப்பு வசதிகள், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பையும் உறுதிப்படுத்தாமலும் அவசர கோலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது, ஏற்புடையது அல்ல என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் சராசரியாக 35 முதல் 40 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இந்த எண்ணிக்கை இனி அதிகரிக்கக்கூடும். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மோதிரங்களை பாதுகாக்க மொத்தம் 7 பெட்டகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இதற்கென 6 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் 2 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த 2 மருத்துவர்கள், 5 அமைச்சு பணியாளர்கள், 2 தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த திட்டத்துக்காக கணினி உதவியாளர்கள் இருவர் உள்ளனர். புதிதாக கணினி உதவியாளர்கள் 2 பேர் எடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இத்திட்டத்துக்காக பாதுகாப்பு பெட்டகங்கள், புதிய ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்க மோதிரம் வைக்கப்பட் டுள்ள அட்டையில் கியூஆர் கோடு மூலம் அது எந்த குழந்தைக்குரியது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அந்த மோதிரம் குழந்தைக்கு வழங்கப்பட்டவுடன் அம்மாவின் கைரேகை பதிவு செய்யப்படும். இவை அனைத்தும் சிசிடிவி கேமரா முன்பு வைத்து நடைபெற உள்ளது. மகப்பேறு சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்டு தாய், சேய் பாதுகாப்பை உறுதி செய்வதை தாண்டி, இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் நெருக்கடியும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும், மருத்து வர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மகப்பேறு சிகிச்சை, தங்க மோதிரத் திட்டத்திலேயே முழுக்கவனத்தையும் மகப்பேறு மருத்துவத் துறை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
அதனால், மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில், கூடுதல் பணியாளர்களை நியமிப்பது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.